செப்டிக் டேங்க் கட்டுமான பணியின்போது, 2 தொழிலாளர்கள் மூச்சுத்திணறி சாவு - கடலூர் அருகே பரிதாபம்
கடலூர் அருகே செப்டிக் டேங்க் கட்டுமான பணியின் போது 2 தொழிலாளர்கள் மூச்சுத்திணறி உயிரிழந்தனர்.
நெல்லிக்குப்பம்,
கடலூர் அருகே பெரியகங்கணாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் ஜெகதீஸ்வரன். இவர் அந்த பகுதியில் புதிதாக வீடு கட்டி வருகிறார். தற்போது அங்கு செப்டிக் டேங்க் கட்டும் பணி நடந்து வருகிறது. இதில் ஒரு வாரத்திற்கு முன்பு கான்கிரீட் போடப்பட்டு இருந்தது. இந்த நிலையில் கான்கிரீட் பலகை மற்றும் கம்புகளை பிரித்து எடுக்கும் பணி நேற்று நடைபெற இருந்தது. இதற்காக விழுப்புரம் அருகே உள்ள கா.குப்பத்தை சேர்ந்த மாணிக்கம் (வயது 49), சித்தேரிக்கரையை சேர்ந்த ராஜ்குமார்(40) உள்பட 4 கட்டிட தொழிலாளர்கள் அங்கு வந்தனர்.
அப்போது செப்டிக் டேங்க் மூடி சிமெண்டு சாக்குகளால் மூடப்பட்டு இருந்தது. அதை தொழிலாளர்கள் அகற்றினர். தொடர்ந்து மாணிக்கம் செப்டிக் டேங்க் உள்ளே இறங்கினார். உள்ளே சென்று நீண்டநேரமாகியும் அவரிடம் இருந்து எந்தவித சப்தமும் இல்லாததால் வெளியே இருந்தவர்கள் அவரை கூப்பிட்டு பார்த்தனர். ஆனால் அவர் பதில் ஏதும் கூறவில்லை. இதையடுத்து ராஜ்குமார் உள்ளே இறங்கி சென்றார். அவரிடம் இருந்தும் எந்த பதிலும் வரவில்லை.
இதனால் உள்ளே சென்ற இருவருக்கும் என்ன ஆனது என்று தெரியாமல் ஏனைய தொழிலாளர்கள் பரிதவித்தனர். இதுகுறித்து உடனடியாக அவர்கள் கடலூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, பாதுகாப்பு கவசத்துடன் செப்டிக் டேங்கிற்குள் இறங்கினர்.
அப்போது தொட்டியின் உள்ளே மாணிக்கம், ராஜ்குமார் இருவரும் மயங்கிய நிலையில் கிடந்தனர். உடன் அவர்கள் இருவரையும் தீயணைப்பு வீரர்கள் வெளியே தூக்கி வந்தனர். அப்போது தான் அவர்கள் இருவரும் இறந்து விட்டார்கள் என்பது தெரியவந்தது. 5 நாட்களாக செப்டிக் டேங்க் மூடிக்கிடந்ததால், மாணிக்கம், ராஜ்குமார் ஆகியோர் உள்ளே இறங்கிய போது மூச்சுத்திணறி இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இதுபற்றி தகவல் அறிந்த ரெட்டிச்சாவடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, 2 பேரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
Related Tags :
Next Story