வெளிநாடுகளில் வேலைவாங்கி தருவதாக கூறி ரூ.2 கோடி மோசடி - 3 பேர் கைது

வெளிநாடுகளில் வேலைவாங்கி தருவதாக கூறி ரூ.2 கோடி மோசடி செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கோவை,
கோவை கணபதியில் பிரின்ஸ் டேனியல்(வயது 34). பொள்ளாச்சியை சேர்ந்த விக்னேஷ் பாரதி(29). அன்னூரை சேர்ந்தவர் அருண்(36) ஆகியோர் தனியார் வேலைவாய்ப்பு நிறுவனம் நடத்தினர்.
இவர்கள் 3 பேரும் சிங்கப்பூர் மற்றும் வெளிநாடுகளில் என்ஜினீயர் மற்றும் தொழில்நுட்ப பணியாளர்களுக்கான வேலை காலி இருப்பதாகவும், மாதம் ரூ.4 லட்சம் வரை சம்பளம் கிடைக்கும் என்று அறிவித்தனர். இதை அறிந்த கோவை வீரகேரளத்தை சேர்ந்த என்ஜினீயர் ஸ்ரீராம்(வயது 24) அந்த வேலைவாய்ப்பு அலுவலகத்தை அணுகினார்.
அப்போது அவர்கள், முதலில் ரூ.2 லட்சம் மற்றும் பாஸ்போர்ட்டை கொடுக்க வேண்டும், வேலை கிடைத்ததும் ரூ.2 லட்சம் கொடுக்க வேண்டும் என்றும் கூறினார்கள். இதை நம்பிய ஸ்ரீராம் ரூ.2 லட்சம் மற்றும் தனது பாஸ்போர்ட்டை கொடுத்தார். அதை பெற்றுக் கொண்ட பிரின்ஸ் டேனியல் மற்றும் 2 பேர் விரைவில் சிங்கப்பூருக்கு அனுப்புவதாகவும் மீதி ரூ.2 லட்சத்தை கொண்டு வந்து கொடுக்கும்படியும் கூறினார்கள்.
ஆனால் நீண்ட நாட்களாகியும் ஸ்ரீராமை சிங்கப்பூருக்கு வேலைக்கு அனுப்பவில்லை. இதுபற்றி பலமுறை ஸ்ரீராம் அந்த வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு சென்று கேட்டார். அதற்கு அவர்கள் சரியாக பதில் அளிக்க வில்லை. ஒரு கட்டத்தில் அந்த அலுவலகம் பூட்டப்பட்டிருந்தது.
இதனால் ஏமாற்றம் அடைந்த ஸ்ரீராம் கொடுத்த புகாரின்பேரில் போலீஸ் துணை கமிஷனர் பெருமாள் மற்றும் உதவி கமிஷனர் சந்திரசேகரன் மற்றும் கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
இதில் பிரின்ஸ் டேனியல் உள்பட 3 பேரும் சேர்ந்து சிங்கப்பூர், மலேசியா, மற்றும் அரபு நாடுகளில் வேலை வாங்கி தருவதாக கூறி பல இளைஞர்களிடம் ரூ.2 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை வாங்கி ரூ.2 கோடி வரை மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து பிரின்ஸ் டேனியல், விக்னேஷ் பாரதி மற்றும் அருண் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் பணம் மற்றும் பாஸ்போர்ட் கொடுத்து ஏமாற்றமடைந்த 26 இளைஞர்களின் பாஸ்போர்ட்டுகள், மடிக்கணினி, ரசீது புத்தகங்கள் உள்பட பல்வேறு ஆவணங்களை போலீசார் கைப்பற்றினார்கள். கைது செய்யப்பட்ட 3 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பறிமுதல் செய்யப்பட்ட 26 பாஸ்போர்ட்டுகளும் விரைவில் உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story