மனைவிக்கு வேலை வழங்க வலியுறுத்தி, அதிகாரிகளுடன் மாற்றுத்திறனாளி வாக்குவாதம் - குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பரபரப்பு


மனைவிக்கு வேலை வழங்க வலியுறுத்தி, அதிகாரிகளுடன் மாற்றுத்திறனாளி வாக்குவாதம் - குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பரபரப்பு
x
தினத்தந்தி 6 Aug 2019 4:00 AM IST (Updated: 6 Aug 2019 4:26 AM IST)
t-max-icont-min-icon

மனைவிக்கு வேலை வழங்க வலியுறுத்தி அதிகாரிகளுடன் மாற்றுத்திறனாளி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம், 

சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ராமன் தலைமையில் நடைபெற்றது. இதில் சேலம் கருப்பூரை சேர்ந்த மாற்றுத்திறனாளி பிரபாகரன் தனது மனைவி அம்சலாலா மற்றும் குழந்தைகளுடன் வந்து மனு கொடுத்தார். அதில் உடல் நலக்குறைவால் என்னால் நடக்க முடியவில்லை. இதனால் குடும்பம் நடத்த மிகவும் சிரமப்பட்டு வருகிறேன்.

எனவே எனது மனைவிக்கு அரசு வேலை வழங்க வலியுறுத்தி கடந்த பல ஆண்டுகளாக மனு கொடுத்து உள்ளேன். அதற்கு எந்த வித நடவடிக்கையும் இல்லை. எனவே எனது மனைவிக்கு விரைவில் வேலை வழங்க வேண்டும் என்று மனுவில் கூறியுள்ளார். மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் ராமன் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். அப்போது பிரபாகரன் பல முறை இதே பதில்தான் கூறப்படுகிறது என்று கூச்சலிட்டார்.

தொடர்ந்து விரைவில் வேலை வழங்கவில்லை என்றால் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்வோம் என்று அவர் கூறினார். அப்போது கலெக்டர் ராமன், அவரிடம் பொறுமையாக இருங்கள். ஏதாவது ஒரு வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். ஆனால் பிரபாகரன் தொடர்ந்து கூச்சலிட்டார்.

அப்போது கூட்டத்தில் இருந்த அதிகாரிகள் பிரபாகரனிடம் வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர். எனினும் பிரபாகரன் அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தார். இதையொட்டி அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பிரபாகரன், அவரது மனைவி மற்றும் குழந்தைகளை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் ஒரு மனு கொடுத்தனர். அதில், கொங்கணாபுரம் ஒன்றிய கோரணம்பட்டி ஊராட்சி மூலப்பாதையை சேர்ந்த விவசாயி மகேஷ்வரன் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து வங்கியில் கடன் பெற்று பால்பண்ணை நடத்தி வந்தனர். அதில் நஷ்டம் ஏற்பட்டது.

சம்பந்தப்பட்ட வங்கி சார்பில் கடனுக்காக பால்பண்ணை ஏலம் விடப்பட்டது. இதனால் விரக்கி அடைந்த விவசாயி மகேஷ்வரன் கடன் பெற்ற வங்கி முன்பு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். எனவே மகேஷ்வரன் வங்கியில் பெற்ற கடனை ரத்து செய்ய வேண்டும். அவரது வீட்டு அடமானப்பத்திரத்தை அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

நாம் தமிழர் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் கொடுத்த மனுவில், அமானி கொண்டலாம்பட்டி ஊராட்சி 10-வது வார்டு பகுதியில் முறையான குடிநீர் வழங்க வலியுறுத்தி ஏற்கனவே மனு கொடுத்து இருந்தோம். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தனர். மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் ராமன், உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

Next Story