சென்னை அண்ணாநகரில் வடமாநில பெண் கொலை 2 வாலிபர்கள் கைது


சென்னை அண்ணாநகரில் வடமாநில பெண் கொலை 2 வாலிபர்கள் கைது
x
தினத்தந்தி 6 Aug 2019 4:45 AM IST (Updated: 6 Aug 2019 4:28 AM IST)
t-max-icont-min-icon

சென்னை அண்ணாநகரில் வடமாநில பெண்ணை கொலை செய்த, அதே மாநிலத்தை சேர்ந்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

பூந்தமல்லி,

மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்தவர் பிங்கி(வயது 30). கணவரை பிரிந்த இவர், அதே மேற்கு வங்காளத்தை சேர்ந்த கிருஷ்ணா பகதூர்(26) என்பவருடன் சென்னை அண்ணாநகரில் உள்ள ஒரு வீட்டில் வாடகைக்கு வசித்து வந்தார்.

நேற்று முன்தினம் வீட்டில் இருந்து வெளியே சென்ற கிருஷ்ணா பகதூர், இரவு வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டின் கழிவறையில் பிங்கி, பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து தகவல் அறிந்ததும் துணை கமிஷனர் முத்துசாமி, திருமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி ஆகியோர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்துசென்று பிங்கியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

2 பேர் கைது

இது தொடர்பாக கிருஷ்ணா பகதூரிடம் விசாரணை நடத்தினர். முதலில் பிங்கி, கழிவறையில் வழுக்கி விழுந்து இறந்து இருக்கலாம் என தெரிவித்தார். மேலும் 2 வடமாநில வாலிபர்கள் பிங்கி வீட்டுக்கு வந்து சென்றதாகவும் தெரிவித்தார்.

இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், 2 வடமாநில வாலிபர்கள் பிங்கியின் வீட்டில் இருந்து வெளியே செல்வது போன்ற காட்சிகள் பதிவாகி இருந்தது.

மேலும் பிங்கியின் செல்போனுக்கு கடைசியாக தொடர்பு கொண்டு பேசியவர்கள் யார்? என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டனர். அதில் உள்ள செல்போன் நம்பரை வைத்து மேற்குவங்காள மாநிலத்தை சேர்ந்த விகாஷ்சர்மா மற்றும் விகாஷ்குமார் ஆகிய 2 பேரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அதில் அவர்கள்தான் பிங்கியை கொலை செய்தது தெரிந்தது. 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. இதுபற்றி போலீசார் கூறியதாவது:-

பச்சை குத்தும் தொழில்

கணவரை பிரிந்த பிங்கி, சென்னை அண்ணாநகரில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தன்னைவிட 4 வயது குறைவான கிருஷ்ணா பகதூருடன் திருமணம் செய்துகொள்ளாமலேயே கணவன்-மனைவி போல் ஒரே வீட்டில் கடந்த சில மாதங்களாக வசித்து வந்தார். பிங்கி, வசதியான பெண்கள் மற்றும் ஆண்களுக்கு உடலில் பச்சை குத்துவது மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து மொத்தமாக உயர்ரக புடவைகளை வாங்கிவந்து அதனை விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார்.

இதனால் இவரது வீட்டுக்கு அடிக்கடி வெளிமாநில வாலிபர்கள் வந்து செல்வதும், அப்போது அவர்களுடன் பிங்கி மது அருந்துவதையும் வழக்கமாக கொண்டிருப்பதும் தெரியவந்தது. அதுபோன்ற நேரங்களில் கிருஷ்ணாபகதூர் வீட்டில் இருந்து வெளியே சென்று விடுவார்.

உல்லாசத்துக்கு மறுப்பு

சம்பவத்தன்று வீட்டுக்கு வந்த விகாஷ்குமார் மற்றும் விகாஷ்சர்மா ஆகியோருடன் சேர்ந்து பிங்கி மது அருந்தினார். பின்னர் பிங்கியுடன் இருவரும் உல்லாசமாக இருந்தனர். அதற்காக பிங்கிக்கு பணமும் கொடுத்தனர். மீண்டும் உல்லாசமாக இருக்க பணம் குறைவாக இருந்ததால் தங்களின் ஆசைக்கு பிங்கி இணங்க மறுத்தார்.

இதனால் ஆத்திரமடைந்த இருவரும் பிங்கியை தாக்கினர். இதில் அவர், வீட்டில் இருந்த கை கழுவும் தொட்டியில்(வாஷ்பேஷன்) தலை மோதி கீழே விழுந்தார். இதுபற்றி வெளியே தெரிந்தால் என்ன செய்வது? என பயந்துபோன இருவரும், பிங்கியின் கைகளை பிடித்துக்கொண்டு தலையணையால் அவரது முகத்தை அமுக்கினர். இதில் அவர் மயங்கினார்.

தண்ணீரில் அமுக்கி கொலை

பின்னர் கழிவறையில் வழுக்கி விழுந்ததுபோல் இருக்க வேண்டும் என்பதற்காக கை கழுவும் தொட்டியில் இருந்த தண்ணீரில் பிங்கியின் முகத்தை அமுக்கினர். இதில் பிங்கி மூச்சுத்திணறி அங்கேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

பின்னர் பிங்கியின் உடலை கழுவறையில் போட்டுவிட்டு, அவரிடம் இருந்த செல்போனை எடுத்துக்கொண்டு இருவரும் அங்கிருந்து தப்பிச்சென்று இருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்

இந்த கொலைக்கு வேறு ஏதாவது காரணம் உள்ளதா? என்ற கோணத்திலும் போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். கைதான இருவரும் தமிழ் தெரியாமல் இந்தியில் பேசி வருவதால் அவர்களிடம் இந்தி பேச தெரிந்த போலீசாரை வைத்து விசாரணை செய்து வாக்குமூலம் வாங்கி வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

Next Story