‘தண்ணீருக்காக உலகப்போர் ஏற்பட வாய்ப்பு’ மத்திய அரசின் நீர்மேலாண்மை இணைச்செயலாளர் பேச்சு
தண்ணீருக்காக உலகப்போர் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக மத்திய அரசின் நீர் மேலாண்மை இணைச்செயலாளர் மெர்வின் அலெக்சாண்டர் தெரிவித்தார்.
நிலக்கோட்டை,
நிலக்கோட்டை அரசு மகளிர் கலைக் கல்லூரியில், நீர் மேலாண்மை செயல்பாடுகள் குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. இதற்கு மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் கவிதா தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் பெத்தாலட்சுமி வரவேற்றார். மத்திய அரசின் நீர் மேலாண்மை இணைச்செயலாளரும், அணு ஆற்றல் துறை அதிகாரியுமான மெர்வின் அலெக்சாண்டர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
இன்றைய சூழ்நிலையில் வளரும் இளம் தலைமுறைகள் தினம்தோறும் வாசிப்புத்திறன் மற்றும் அன்றாட நிகழ்ச்சிகளை பத்திரிகைகள் வாயிலாக படிக்க வேண்டும். மத்திய அரசு பெண் குழந்தைகளுக்காக செல்வமகள் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை கொண்டுவந்துள்ளது. இன்றைக்கு மக்களின் வளர்ச்சி அதிகமாக இருப்பதால் நீரின் தேவை அதிகரித்து உள்ளது.
உலகத்தில் இருக்கக்கூடிய நீரில் 97 சதவீதம் உப்பு நீராக இருக்கிறது. மீதமுள்ள 3 சதவீதம் தான் நல்ல நீராக இருக்கிறது. அதிலும் குறைந்தளவே தண்ணீர் எடுக்கப்பட்டு மக்களின் தேவைகள் பூர்த்தி செய்யப்படுகிறது. எனவே நீரை பாதுகாக்க மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டி உள்ளது. வருங்காலத்தில் தண்ணீருக்காக மிகப்பெரிய உலகப்போர் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
இதையெல்லாம் தவிர்க்க வேண்டும் என்றால் மாணவ சமுதாயம் நீரின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் திண்டுக்கல் மாவட்ட செயற்பொறியாளர் ராமசாமி, மாவட்ட திட்ட பயிற்சியாளர் மதுபாலா, நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் லாரன்ஸ், வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வராஜ், உதவி செயற்பொறியாளர் வெற்றிவீரன், உதவி பொறியாளர் டில்லி, கல்லூரி பேராசிரியர் சின்னசாமி, லதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக கல்லூரி வளாகத்தில் மத்திய அரசின் நீர் மேலாண்மை இணைச்செயலாளர் மெர்வின் அலெக்சாண்டர் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.
Related Tags :
Next Story