ஊட்டி அரசு தலைமை மருத்துவமனையில், மார்பக புற்றுநோயை கண்டறிய நவீன கருவி


ஊட்டி அரசு தலைமை மருத்துவமனையில், மார்பக புற்றுநோயை கண்டறிய நவீன கருவி
x
தினத்தந்தி 7 Aug 2019 3:45 AM IST (Updated: 7 Aug 2019 12:11 AM IST)
t-max-icont-min-icon

ஊட்டி அரசு தலைமை மருத்துவமனையில் மார்பக புற்றுநோயை கண்டறிய நவீன கருவி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த வசதியை பெண்கள் கட்டணமில்லாமல் பயன்படுத்திக்கொள்ளலாம் என டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் அரசு தலைமை மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு புறநோயாளிகள் பிரிவு, விபத்து மற்றும் அவசர சிகிச்சை, எலும்பு முறிவு, காசநோய், காது, மூக்கு, தொண்டை உள்பட 15-க்கும் மேற்பட்ட வார்டுகள் உள்ளன. மருத்துவமனையில் எம்.ஆர்.ஐ. ஸ்கேன், சி.டி. ஸ்கேன், முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் போன்ற வசதிகள் இருக்கிறது. இந்த மருத்துவமனையில் நாள்தோறும் ஏராளமானோர் சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

இந்தநிலையில், மார்பக புற்றுநோய், சிறுநீரக கோளாறு, இருதய நோய் உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகளுக்கு கோவை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு சென்று சிகிச்சை பெற வேண்டிய நிலை காணப்படுகிறது. இதற்கிடையே மலை மாவட்டமான நீலகிரியில் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் பாதிப்பு ஏற்படுவது அதிகரித்து வருகிறது. இந்த புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதற்கான அறிகுறிகள் உள்ளதா? என்று பரிசோதனை செய்து உறுதிப்படுத்த ஊட்டி அரசு மருத்துவமனையில் நவீன கருவி இல்லாமல் இருந்தது.

அதனால் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் வெளிமாவட்டங்களுக்கு சிகிச்சைக்காக சென்று வந்தனர். மேலும் ஏழை, எளிய பெண்கள் மேற்கொண்டு சிகிச்சை பெற முடியாமல் வீட்டிலேயே இருந்தனர். இதனை தவிர்க்கும் பொருட்டு, ரூ.21 லட்சம் மதிப்பில் பெண்களுக்கான மார்பக புற்றுநோயை கண்டறியும் நவீன கருவி ஊட்டி அரசு மருத்துவமனையில் புதியதாக அமைக்கப்பட்டு உள்ளது. இதற்காக தனி அறை ஒதுக்கப்பட்டு உள்ளது. இந்த நவீன கருவியின் செயல்பாட்டை மருத்துவ பணிகள் இணை இயக்குனர் டாக்டர் ரவிக்குமார் தொடங்கி வைத்தார்.

நவீன கருவியில் உள்ள டிஜிட்டல் மாமோகிராம் என்ற கருவி மூலம், மார்பக புற்றுநோய்க்கான அறிகுறிகள் உள்ளதா? என்பதை சுமார் 15 நிமிடங்களில் எளிதாக கண்டறிய முடியும்.

இந்த பரிசோதனைக்கு பெண்கள் கட்டணம் ஏதும் செலுத்த வேண்டியது இல்லை. பெண்களின் சிரமத்தை போக்க நீலகிரி மாவட்டம் ஊட்டியில் முதல் முறையாக மார்பக புற்றுநோய் கண்டறியும் நவீன கருவி பொருத்தப்பட்டு உள்ளது. இதன் மூலம் பெண்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, மார்பக புற்றுநோய் அறிகுறி இருந்தால் ஆரம்ப கட்டத்திலேயே குணப்படுத்த முடியும். இந்த கருவியை நீலகிரி மாவட்ட பெண்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

Next Story