இரட்டை கொலைக்கு காரணமாக இருந்த முதலைப்பட்டி ஏரியில் போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகள் அகற்றம்


இரட்டை கொலைக்கு காரணமாக இருந்த முதலைப்பட்டி ஏரியில் போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
x
தினத்தந்தி 7 Aug 2019 4:45 AM IST (Updated: 7 Aug 2019 1:01 AM IST)
t-max-icont-min-icon

இரட்டை கொலைக்கு காரணமாக இருந்த முதலைப்பட்டி ஏரி ஆக்கிரமிப்புகளை மதுரை ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் அதிகாரிகள் அகற்றினர்.

நச்சலூர்,

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே முதலைப்பட்டியில் முதலியப்பா ஏரி உள்ளது. இந்த ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அதிகாரிகளுக்கு அடையாளம் காட்டியதால், அப்பகுதியை சேர்ந்த வீரமலை, அவரது மகன் நல்லதம்பி ஆகியோர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டனர்.

இது தொடர்பாக பத்திரிகை செய்திகளின் அடிப்படையில் மதுரை ஐகோர்ட்டு பதிவாளர், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் தாமாக முன்வந்து கோர்ட்டு இந்த வழக்கினை விசாரித்தது. முதலைப்பட்டியிலுள்ள ஆக்கிரமிப்பு ஏரியின் அசல் பரப்பளவு எவ்வளவு? ஆக்கிரமிப்பு எவ்வளவு உள்ளது? என்பன போன்ற விவரங்களை வருவாய்த்துறையினர் அறிக்கையாக வருகிற 14-ந்தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து கரூர் வருவாய்த்துறையினர் முதலைப்பட்டியிலுள்ள ஏரியை பார்வையிட்டு, அது தொடர்பாக தங்களது துறையில் உள்ள ஆவணங்களை ஒப்பீடு செய்து சரிபார்த்தனர். பின்னர் அந்த ஏரியில் ஆக்கிரமிப்புகள் எவ்வளவு இருக்கிறது? என்பதை கணக்கீடு செய்தனர். பின்னர் கரைகளை பலப்படுத்தி ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் குறித்து ஆலோசித்தனர்.

இந்த நிலையில் நேற்று காலை தோகைமலை வட்டார வளர்ச்சி அதிகாரி ராஜேந்திரன், துணை வட்டார வளர்ச்சி அதிகாரி ராணி உள்பட வருவாய்த்துறையினர் 5 பொக்லைன் எந்திரங்களுடன் முதலைப்பட்டியிலுள்ள அந்த ஏரிக்கு வந்தனர். பின்னர் அதிகாரிகள் அறிவுறுத்தலின் பேரில் அங்கு ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடந்தது. அங்கு ஆக்கிரமிப்பில் இருந்த விவசாய வயல்கள் பொக்லைன் மூலம் தோண்டப்பட்டு சமன்படுத்தப்பட்டது. பின்னர் அந்த மண்ணை லாரிகளில் அள்ளி சென்று கரை அமைக்கும் பணி நடந்தன. இதற்கிடையே ஆக்கிரமிப்பாளர்கள் உள்ளிட்டோர் அங்கு திரண்டதால் பதற்றமான சூழல் நிலவியது.

இதனையடுத்து அசம்பாவித சம்பவங்கள் ஏதேனும் ஏற்படுவதை தடுப்பதற்காக குளித்தலை போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) முகமது இத்ரீஸ் தலைமையிலான போலீசார் மற்றும் அதிவிரைவுப்படை போலீசார் அங்கு குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் ஆக்கிரமிப்பு அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து யாரும் இடையூறு செய்ய முயற்சிக்கின்றனரா? என தீவிரமாக கண்காணித்தனர்.

இதற்கிடையே அங்கு மாவட்ட வருவாய் அதிகாரி சூர்யபிரகாஷ், குளித்தலை வருவாய் கோட்டாட்சியர் லியாகத் ஆகியோர் வந்து ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது பாரபட்சம் பார்க்காமல் ஆக்கிரமிப்பில் உள்ள அனைத்தையும் அகற்றி ஏரியினை மீட்டெடுக்குமாறு உத்தரவிட்டனர். மேலும் ஏரியின் வரைபடத்தை பார்வையிட்டு, எங்கெல்லாம் ஆக்கிரமிப்பு இருக்கிறது? என்பதை கேட்டறிந்து அதனை விரைவில் அகற்ற அவர்கள் அறிவுறுத்தினர்.

இதைத்தொடர்ந்து மாவட்ட வருவாய் அதிகாரி சூர்யபிரகாஷ் நிருபர்களிடம் கூறியதாவது:-

மதுரை ஐகோர்ட்டு உத்தரவின் படி முதல் கட்டமாக முதலைப்பட்டி ஏரியில் 39 ஏக்கர் பரப்பளவு உள்ள ஆக்கிரமிப்பு நிலத்தை அகற்றி அப்புறப்படுத்தும் பணி நடைபெற்று வருகின்றது. பின்னர் ஏரி தூர்வாரும் பணி நடைபெற உள்ளது. ஏரியின் ஆக்கிரப்பு உள்ள பகுதியில் எல்லைக்குட்பட்ட இடத்தில் எல்லைக்கல் அமைக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. மேலும் மீதமுள்ள 157 ஏக்கர் நிலம் தொடர்பாக மதுரை ஐகோர்ட்டு உத்தரவுக்கு பிறகு மற்ற பணிகள் குறித்து ஆய்வு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story