வேலூரில் தேர்தல் பணிக்கு போலீசார் சென்றதால், அனைத்து சாலைகளிலும் போக்குவரத்து நெரிசல்


வேலூரில் தேர்தல் பணிக்கு போலீசார் சென்றதால், அனைத்து சாலைகளிலும் போக்குவரத்து நெரிசல்
x
தினத்தந்தி 6 Aug 2019 10:30 PM GMT (Updated: 6 Aug 2019 8:14 PM GMT)

வேலூரில் போலீசார் வாக்குப்பெட்டியை கொண்டு சேர்க்கும் பணிக்கு சென்ற நிலையில் அனைத்து சாலைகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளானார்கள்.

வேலூர்,

வேலூர் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நேற்றுமுன்தினம் நடந்தது. இதனால் போலீசார் அனைவரும் ஒருநாள் முன்னதாகவே தேர்தல் பாதுகாப்பு பணிக்கு சென்றுவிட்டனர். வாக்குப்பதிவு முடிந்து வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும், வாக்கு எண்ணும் மையமான ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரிக்கு நேற்று கொண்டு சேர்க்கும் வரையில் அவர்கள் பாதுகாப்பு பணியில் இருந்தனர்.

இதனால் நேற்று அதிகாலை வரையில் அவர்கள் தேர்தல் பாதுகாப்பு பணியில் இருக்கவேண்டியநிலை ஏற்பட்டது. அவர்கள் தேர்தல் பணியை முடித்து வீட்டுக்கு சென்றனர்.

அதன்காரணமாக நேற்று வேலூர் நகரில் எந்தவொரு போக்குவரத்து சிக்னலிலும் போலீசார் இல்லை. இதனால் வாகன ஓட்டிகள் தங்கள் இஷ்டம்போல் சென்றனர். ஆற்காடு ரோடு ஒரு வழிப்பாதை என்றாலும் நேற்று போலீசார் இல்லாததால் இருவழிப்பாதையாக செயல்பட்டது. பெரும்பாலான கார்கள் எதிர்திசையில் சென்றன. இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

மேலும் கன்டெய்னர் லாரி ஒன்றும் ஆற்காடு ரோடு ஒருவழிப்பாதையில் பழைய கிரவுண் தியேட்டர் வரை வந்து விட்டது. இதைப்பார்த்த ஆட்டோ டிரைவர்கள் லாரி செல்லமுடியாது என்று கூறியதால் அந்த இடத்திலேயே லாரியை திருப்பினர். இதன் காரணமாகவும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதேபோன்று அண்ணாசாலை, ஆரணிரோடு பகுதிகளிலும் நேற்று போக்குவரத்துநெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்து நெரிசலை சரிபடுத்த போலீசார் இல்லாததால் வாகன ஓட்டிகள் நீண்டநேரம் நெரிசலில் சிக்கி அவதிக்குள்ளாகும் நிலை ஏற்பட்டது. நடந்து செல்பவர்களும் வாகனங்களுக்கு மத்தியில் சிக்கிக்கொண்டு செல்ல முடியாமல் திணறினர்.

Next Story