காஷ்மீர் விவகாரம்: குமரி மாவட்டத்தில் பலத்த பாதுகாப்பு 24 மணி நேரமும் போலீசார் ரோந்து


காஷ்மீர் விவகாரம்: குமரி மாவட்டத்தில் பலத்த பாதுகாப்பு 24 மணி நேரமும் போலீசார் ரோந்து
x
தினத்தந்தி 7 Aug 2019 4:15 AM IST (Updated: 7 Aug 2019 2:56 AM IST)
t-max-icont-min-icon

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக குமரி மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. அவர்கள் 24 மணி நேரமும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

நாகர்கோவில்,

காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்தை ஜனாதிபதி நேற்று முன்தினம் ரத்து செய்து உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து அந்த மாநிலத்தை ஜம்மு-காஷ்மீர் சட்டசபையுடன் கூடிய யூனியன் பிரதேசமாகவும், லடாக் சட்டசபை இல்லாத யூனியன் பிரதேசமாகவும் பிரிக்க வகை செய்யும் மசோதாவை மத்திய அரசு மாநிலங்களவையில் தாக்கல் செய்து நிறைவேற்றியது. காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. அதே போல தமிழகத்திலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. இதற்காக தனியாக ஐ.பி.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

அந்த வகையில் குமரி, நெல்லை மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய நெல்லை சரகத்துக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை கண்காணிக்க கூடுதல் டி.ஜி.பி. மகேஷ்குமார் அகர்வால் நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

அதைத் தொடர்ந்து கூடுதல் டி.ஜி.பி. மகேஷ்குமார் அகர்வால் நேற்று முன்தினம் இரவு குமரி மாவட்ட உயர் போலீஸ் அதிகாரிகளை தொடர்பு கொண்டு மாவட்டத்தின் சட்டம்-ஒழுங்கு பற்றி கேட்டறிந்தார். மேலும் காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக ஏதேனும் போராட்டங்கள் நடந்ததா? போராட்டங்களுக்கு அனுமதி கேட்கப்பட்டு இருக்கிறதா? என்றும் அவர் கேட்டறிந்தார். அதோடு அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் உத்தரவு பிறப்பித்தார்.

இதனையடுத்து குமரி மாவட்டம் முழுவதும் நேற்று காலை முதல் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. போலீசார் 24 மணி நேரமும் ரோந்து பணியில் ஈடுபடவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அதன்படி ரோந்து பிரிவு போலீசார் கண்காணிப்பு பணியை தீவிரமாக செய்து வருகிறார்கள்.

மேலும் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட பா.ஜனதா அலுவலகம் மற்றும் அ.தி.மு.க. அலுவலகம் முன் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

இதே போல சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவில் மற்றும் முக்கிய கோவில்கள், பள்ளி வாசல்கள் மற்றும் கிறிஸ்தவ ஆலயங்கள் முன்பும் பாதுகாப்புக்காக போலீசார் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். சுற்றுலா பயணிகள் குவியும் கன்னியாகுமரி, திற்பரப்பு அருவி, சொத்தவிளை, சங்குத்துறை, வட்ட கோட்டை உள்ளிட்ட இடங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருக்கிறது.

நாகர்கோவில், குழித்துறை, கன்னியாகுமரி உள்ளிட்ட ரெயில் நிலையங்கள், வடசேரி, அண்ணா பஸ் நிலையங்கள், முக்கிய பஸ் நிறுத்தங்கள் மற்றும் போராட்டங்கள் நடத்தப்படும் இடங்களில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. இந்த இடங்களில் எல்லாம் போலீஸ் வாகனம் 24 மணி நேரமும் நிறுத்தப்பட்டு உள்ளது. குறிப்பாக கலெக்டர் அலுவலகம் எதிரிலும், தலைமை தபால் நிலையம் முன்பும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதுபோக சுற்றுலா தலங்களில் உள்ள தங்கும் விடுதிகளில் சந்தேகப்படும்படியாக யாரேனும் தங்கி உள்ளார்களா? என்றும் போலீசார் சோதனை நடத்தி வருகிறார்கள். மேலும் காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போராட்டம் நடத்தவும் அனுமதி மறுக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அனுமதியின்றி போராட்டம் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்தனர். 

Next Story