கள்ளக்குறிச்சி அருகே, தூங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம் 10 பவுன் நகை பறிப்பு - மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
கள்ளக்குறிச்சி அருகே தூங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம் 10 பவுன் நகையை பறித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சி அருகே உள்ள நீலமங்கலத்தை சேர்ந்தவர் செந்தில். இவரது மனைவி நந்தினி (வயது 26). இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவு வீட்டின் முன்பு உள்ள வராண்டாவில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்த மர்ம நபர்கள் 2 பேர், தூங்கிக் கொண்டிருந்த நந்தினியின் கழுத்தில் கிடந்த 10 பவுன் நகையை பறிக்க முயன்றனர்.
இதில் திடுக்கிட்டு எழுந்த நந்தினி திருடன் திருடன் என கூச்சலிட்டார். உடனே மர்மநபர்கள் நகையை பறித்துக் கொண்டு அங்கிருந்து ஓடினர். இதற்கிடையே சத்தம் கேட்டு எழுந்த செந்தில் மற்றும் அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து மர்மநபர்களை விரட்டிச் சென்றனர். இருப்பினும் அவர்கள் அங்கிருந்து ஓடி தலைமறைவாகினர். பறிபோன நகையின் மதிப்பு ரூ.2½ லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
இதுபற்றி தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை பறித்துச் சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் 10 பவுன் நகையை மர்மநபர்கள் பறித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story