போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில், மாவட்டத்தில் கடந்த 2 நாட்களில் 30 ரவுடிகள் கைது
போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில் விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களில் 30 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விழுப்புரம்,
தமிழகம் முழுவதும் கொலை, கொள்ளை, வழிப்பறி, அடி-தடி போன்ற குற்ற செயல்களில் ஈடுபடும் ரவுடிகளை அதிரடியாக கைது செய்ய போலீஸ் டி.ஜி.பி. திரிபாதி உத்தரவிட்டுள்ளார். அதன்படி அனைத்து மாவட்டங்களிலும் ரவுடிகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டு அவர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர்.
அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வரும் ரவுடிகளை தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை எடுக்க போலீஸ் அதிகாரிகளுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் கடந்த 2 நாட்களாக போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இதில் கொலை, கொள்ளை, வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டிருந்த பழைய குற்றவாளிகளின் பட்டியலை 3 ஆக பிரித்து, அவர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று அவர்களின் தற்போதைய செயல்பாடு குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட பிரபல ரவுடிகளான விக்கிரவாண்டியை சேர்ந்த கைப்பிள்ளை ராஜ் என்கிற வரதராஜ், திண்டிவனத்தை சேர்ந்த திகில்ஜெகதீசன், விழுப்புரத்தை சேர்ந்த தீனா என்கிற தினகர்ராஜ் உள்பட 30 ரவுடிகள் கைது செய்யப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
மேலும் தற்போது ஜாமீனில் வெளியே வந்து தலைமறைவாக உள்ள 6 ரவுடிகளையும் பிடிப்பதற்காக அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story