அபுதாபியில் இருந்து மும்பை வந்த விமானத்தில் புகைப்பிடித்த பயணி கைது
மும்பை வந்த விமானத்தில் புகைப்பிடித்த பயணி கைது செய்யப்பட்டார்.
மும்பை,
அபுதாபியில் இருந்து நேற்று முன்தினம் மும்பைக்கு இண்டிகோ விமானம் ஒன்று புறப்பட்டு வந்தது. விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்த போது, திடீரென விமானத்தில் உள்ள தீத்தடுப்பு அலாரம் ஒலிக்கத்தொடங்கியது. இதனால் பதறிப்போன ஊழியர்கள் விமானத்தில் சோதனை செய்தனர். அப்போது பயணி ஒருவர் இருக்கையில் இல்லாமல் இருந்தார். மேலும் அவர் கழிவறையில் இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து விமானத்தில் உள்ள கழிவறைக்கு ஓடிச்சென்றனர். அப்போது கழிவறை கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. இதனால் கதவை தட்டிப்பார்த்தனர். ஆனால் உள்ளே இருந்தவர் கதவை திறக்கவில்லை. இதனால் மாற்று சாவி மூலம் கதவை திறந்து உள்ளே சென்றனர். அப்போது, கழிவறைக்குள் அந்த பயணி சிகரெட் புகைத்துக்கொண்டிருந்தது தெரியவந்தது.
இந்தநிலையில் விமானம் மும்பையில் தரையிறங்கியதும், அவரை விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசாா் நடத்திய விசாரணையில், பிடிபட்ட பயணி மத்திய பிரதேசத்தை சேர்ந்த தனியார் காப்பீடு நிறுவன அதிகாரி துஷார் சவுத்ரி (வயது27) என்பது தெரியவந்தது. அவர் அலுவலக பணி நிமித்தமாக அபுதாபி சென்றுவிட்டு திரும்பி வந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.
பின்னர் துஷார் சவுத்ரி, கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, போலீஸ் காவலில் ஒப்படைக்கப்பட்டார்.
இந்திய விமான பயண பாதுகாப்பு விதிமுறைகளின் படி விமானத்தில் புகைப்பிடிப்பது தண்டனைக்குரிய குற்றம் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story