தாராவியில் 2 வீடுகளில் நகை, பணம், செல்போன் திருட்டு மர்ம ஆசாமிகளுக்கு வலைவீச்சு


தாராவியில் 2 வீடுகளில் நகை, பணம், செல்போன் திருட்டு மர்ம ஆசாமிகளுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 7 Aug 2019 4:23 AM IST (Updated: 7 Aug 2019 4:23 AM IST)
t-max-icont-min-icon

தாராவியில் 2 வீடுகளில் நகை, பணம், செல்போனை திருடி சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மும்பை,

மும்பை தாராவி ஹனுமன் சவுக் அருகே உள்ள பாலாஜி நகர் பகுதியை சேர்ந்த மூதாட்டி சக்காராம்பாய்(வயது68). இவர் நேற்றுமுன்தினம் உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டு, நேற்று காலை வீடு திரும்பினார். அப்போது வீட்டு கதவு திறந்து கிடந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த 5 பவுன் நகை மற்றும் ரூ.5 ஆயிரம் திருடப்பட்டு இருந்தது.

நள்ளிரவு நேரத்தில் வீட்டுக்குள் புகுந்த மர்மஆசாமிகள் நகை, பணத்தை திருடி சென்றிருந்தது தெரியவந்தது. முன்னதாக திருட்டு ஆசாமிகள் பிடிபட்டு விடாமல் இருப்பதற்காக பக்கத்து வீட்டு கதவுகளை வெளிப்புறமாக தாழ்ப்பாள் போட்டு விட்டு சக்காராம்பாய் வீட்டில் திருடி சென்று உள்ளனர்.

தபால் ஊழியர் வீட்டில்...

இதுபோல தாராவி பீலா பங்களாவில் உள்ள வாடகை வீட்டில் நெல்லை மாவட்டம் மருதம்புத்தூரை சேர்ந்த முகேஷ் நாதன் (29) என்பவர் தங்கியிருக்கிறார். இவர் தானேயில் உள்ள தபால் அலுவலகத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்றுமுன்தினம் இரவு வீட்டில் அயர்ந்து தூங்கி கொண்டிருந்தார். நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்த திருடர்கள் ரூ.4 ஆயிரம், 2 செல்போன்கள் மற்றும் முகேஷ் நாதனின் பாஸ்போர்ட், கிரெடிட் கார்டு, பள்ளி, கல்லூரி சான்றிதழ்களை திருடிச்சென்றனர்.

அந்த ஆசாமிகள் பணம் மற்றும் செல்போனை எடுத்துக் கொண்டு ஆவணங்கள் இருந்த பையை கன்னடி சால் பகுதியில் வீசிவிட்டு சென்றுவிட்டனர். இதை அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் மீட்டு போலீசில் ஒப்படைத்தார்.

இந்தநிலையில் காலை எழுந்த முகேஷ் நாதன் பணம், செல்போன், ஆவணங்கள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இதுகுறித்து அவர் தாராவி போலீசில் புகார் கொடுத்தார்.

மேற்படி இரு திருட்டு சம்பவங்கள் குறித்தும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story