வானவில் : வருகிறது நான்காம் தலைமுறை ‘ஜீப் ராங்லர்’


வானவில் : வருகிறது நான்காம் தலைமுறை ‘ஜீப் ராங்லர்’
x
தினத்தந்தி 7 Aug 2019 9:41 AM GMT (Updated: 7 Aug 2019 9:41 AM GMT)

அமெரிக்காவைச் சேர்ந்த ஜீப் நிறுவனத்தின் பிரபல மாடலான ராங்லர் மாடலில் நான்காம் தலைமுறை அறிமுகமாக உள்ளது.

தற்போது விற்பனையாகிவரும் ராங்லர் மாடல் லாஸ் ஏஞ்சல்ஸ் ஆட்டோமொபைல் கண்காட்சியில் 2017-ல் காட்சிப்படுத்தப்பட்டிருந்த மாடலாகும்.

ஐந்து கதவுகளைக் கொண்டதாக கம்பீரமான தோற்றத்துடன் சாலை மற்றும் சாகச பயணத்துக்கேற்ற வகையில் இது தயாரிக்கப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் விற்பனையாகும் ஜீப் ராங்லர் சகாரா மாடலின் வடிவமைப்பைக் கொண்டதாக இது விளங்குகிறது. இதன் முகப்பு தோற்றம் ஜீப் சி.ஜே. 15 மாடலைப் போல உள்ளது. இதன் பின்புறத்தில் விளக்குகள் வெகு நேர்த்தியாக, தொலைவிலிருந்து பார்த்தாலும் மிகச் சிறப்பாக ஒளிரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பின்புறத்தில் உள்ள ஸ்டெப்னி டயரால் எந்த வகையிலும் விளக்கு வெளிச்சம் பாதிக்கப்படாத வகையில் வாகனத்தின் பின்பகுதி வடிவமைக்கப்பட்டுள்ளது. உள்புறத்திலும் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. 8.4 அங்குல இன்போடெயின்மென்ட் திரை உள்ளது.

டியூயல் ஸோன் கிளைமேட் கண்ட்ரோல் வசதி கொண்டது. பின் இருக்கை பயணிகளுக்கென பின் பகுதியில் ஏ.சி. வென்ட் உள்ளது. இது சிறந்த குளிர்ச்சியை அளிக்கிறது. மேலும் அனைத்து பயணிகளும் சவுகரியமாக பயணிக்கும் வகையில் அதிக இட வசதி கொண்டதாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. அதேபோல ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்ய வசதியாக 12 வோல்ட் யு.எஸ்.பி. போர்ட் வசதிகளும் இதில் உள்ளன. சர்வதேச அளவில் பெட்ரோல் வேரியன்ட்டில் 2 மாடலும் டீசல் வேரியன்ட்டில் இரண்டு மாடலும் வெளிவந்துள்ளன. 3.6 லிட்டர் வி 6 பெட்ரோல் என்ஜின், 2 லிட்டர் 4 சிலிண்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் என இரண்டு மாடலும், டீசலில் 2.2 லிட்டர் 4 சிலிண்டர் டர்போ டீசல் மாடலும், 3 லிட்டர் வி 6 டர்போ டீசல் மாடலும் தற்போது புழக்கத்தில் உள்ளன.

அமெரிக்காவில் உள்ள டொலேடோ ஆலையில் இவை தயாரிக்கப்படுகின்றன. இந்தியாவில் இவை அப்படியே இறக்குமதி செய்து விற்பனை செய்ய நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த மாடல் 9 ஸ்பீடு கியர்களைக் கொண்டதாக உள்ளது. ஜீப் நிறுவன தயாரிப்புகளை எதிர்நோக்கும் இந்திய வாடிக்கையாளர்களுக்கு ராங்லர் வரவு மிகுந்த மகிழ்ச்சியளிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

Next Story