வானவில் : தயாராகிறது டிரையம்ப் ராக்கெட் 3 ஆர், 3 ஜி.டி.
பிரீமியம் மோட்டார் சைக்கிள் பட்டியலில் இங்கிலாந்தின் டிரையம்ப் மோட்டார் சைக்கிள்களுக்கு முக்கிய இடமுண்டு.
இந்நிறுவனம் அடுத்த ஆண்டு சந்தையில் விற்பனைக்கு வர உள்ள டிரையம்ப் ராக்கெட் 3 ஆர் மற்றும் ராக்கெட் 3 ஜி.டி. ஆகிய மாடல் மோட்டார் சைக்கிள்களை காட்சிப்படுத்தியுள்ளது. நீண்ட தூர பயணத்துக்கு மட்டுமின்றி சாதாரண சாலைகளிலும் பயன்படுத்தும் வகையில் இவை வடிவமைக்கப்பட்டுள்ளன. இதில் ஜி.டி. மாடல் மட்டும் குரூயிஸர் வகையைச் சேர்ந்தது. ஆனால் இரண்டு மாடலிலுமே ஒரே திறன் உள்ள என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது.
டிரையம்ப் மாடல் மோட்டார் சைக்கிள் 2,500 சி.சி. திறன் கொண்டது. முந்தைய ராக்கெட் மாடல் 2,300 சி.சி. திறன் கொண்டதாக வந்தது. தற்போதைய மாடலின் திறன் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதில் லிக்விட் கூல்டு என்ஜின் உள்ளது. இது 3 சிலிண்டரைக் கொண்டது. 167 ஹெச்.பி. திறனை 6 ஆயிரம் ஆர்.பி.எம். வேகத்தில் வெளிப்படுத்தக் கூடியது. முந்தைய மாடலைக் காட்டிலும் இதன் திறன் 11 சதம் கூடுதலாகும். அதேபோல 221 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை 4 ஆயிரம் ஆர்.பி.எம். வேகத்தில் வெளிப்படுத்தக் கூடியது. இந்த மோட்டார் சைக்கிளை ஸ்டார்ட் செய்த 2.79 வினாடிகளுக்குள் 100 கி.மீ. வேகத்தைத் தொட்டுவிட முடியும்.
இந்த மோட்டார் சைக்கிளின் புதிய என்ஜின் எடை குறைவானது. முந்தைய மாடலைக் காட்டிலும் 40 கிலோ குறைந்துள்ளது. இதனால் சீறிப் பாய்வதோடு மைலேஜும் தரும். இதில் டிராக்ஷன் கண்ட்ரோல், ஏ.பி.எஸ். வசதிகள் உள்ளன. மழை நேரத்தில் ஓட்டுவதற்கும், சாதாரண சாலைகளில் ஓட்டுவதற்கும், ஸ்போர்ட் மற்றும் ரைடர் என இரண்டு வசதிகள் உள்ளன.
இவ்விரண்டு மாடல்களின் தோற்றப் பொலிவே கம்பீரமாக உள்ளன. இதற்கு ஈடு இணை இல்லை என்பதைப் போல இவை வடிவமைக்கப்பட்டுள்ளன. இதை முதலில் பார்க்கும்போது பிரம்மாண்டமான என்ஜின் மற்றும் இரட்டைக் குழல் சைலன்சர்தான் உங்கள் கண்களுக்குப் படும். இரட்டை எல்.இ.டி. முகப்பு விளக்கு, பகலில் ஒளிரும் டி.ஆர்.எல். விளக்கு ஆகியன முகப்புத் தோற்றத்தை மெருகேற்றுகிறது.
டிரையம்ப் நிறுவனம் தனது இரண்டாவது தலைமுறை டி.எப்.டி. இன்ஸ்ட்ருமென்ட் கிளஸ்டரை இதில் பயன்படுத்தியுள்ளது. ஸ்மார்ட்போனுடன் இணைப்பு ஏற்படுத்தும் வகையில் இதன் தொடு திரை உள்ளது. 3 ஆர் மாடலில் ஒரே கம்பியில் வடிவமைக்கப்பட்ட ஹேண்டில் பார் உள்ளது. 3 ஜி.டி. மாடலில் சற்றே ஓய்வாக ஓட்டும் வகையில் ஹேண்டில்பார் உள்ளது. காலை நீட்டி சொகுசாக பயணிக்கும் வகையில் கால் வைக்கும் வசதியும் உள்ளது. இரண்டு மாடலிலுமே அலாய் சக்கரங்களைக் கொண்ட மாடலும் வந்துள்ளன. முன் சக்கரத்தில் இருபுறமும் உள்ள டிஸ்க் பிரேக்கும், பின்சக்கரத்தில் ஒரு பக்கம் அமைக்கப்பட்ட டிஸ்க் பிரேக்கும் உள்ளன.
இரண்டு மாடல் மோட்டார் சைக்கிளுமே இந்த ஆண்டு இத்தாலியின் மிலான் நகரில் நவம்பர் 5-ம் தேதி முதல் நடைபெற உள்ள இ.ஐ.சி.எம்.ஏ. கண்காட்சியில் இடம்பெறுகிறது. அடுத்த ஆண்டு இந்த மாடல்கள் முதலில் ஐரோப்பிய சந்தையிலும், பின்னர் அமெரிக்காவிலும் அதைத் தொடர்ந்து இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளிலும் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story