கூடலூர் அருகே, கணவனை அடித்து கொன்ற பெண் கைது
கூடலூர் அருகே கணவனை அடித்து கொன்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கூடலூர்,
கூடலூர் தாலுகா ஸ்ரீமதுரை ஊராட்சி மானிமூலா ஆதிவாசி காலனியை சேர்ந்தவர் மணி (வயது 31). தொழிலாளி. இவரது மனைவி வள்ளி (28). கடந்த 1 மாதத்துக்கு முன்பு தனது அம்மா வீட்டுக்கு வள்ளி சென்றார். அவருடன் மணியையும் அழைத்து சென்றார். மாமியார் வீட்டில் இருந்து கொண்டு மணி வேலைக்கு சென்று வந்தார்.
இந்த நிலையில் கடந்த 5-ந் தேதி இரவு மணி மதுபோதையில் கிழே விழுந்து பலத்த காயம் அடைந்து விட்டதாக கூறி வள்ளி மற்றும் அவரது உறவினர்கள் கூடலூர் அரசு ஆஸ்பத்திரியில் மணியை சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். தகவல் அறிந்த கூடலூர் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
அப்போது மணியின் உடலில் காயங்கள் இருந்தது தெரிய வந்தது. இதையொட்டி உடலை கைப்பற்றி போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து கூடலூர் போலீசார் மர்ம சாவு என வழக்கு பதிவு செய்தனர். பின்னர் மணியின் மனைவி வள்ளி மற்றும் உறவினர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது வள்ளி தனது கணவன் மணியை கட்டையால் அடித்து கொலை செய்தது தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து வள்ளியை நேற்று கைது செய்தனர். இது குறித்து போலீசார் கூறியதாவது:-
மணிக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. சம்பவத்தன்று வள்ளி ரூ.200 பணம் கொடுத்து கடைக்கு சென்று அரிசி வாங்கி வருமாறு கூறி உள்ளார். அந்த பணத்தில் அரிசி வாங்காமல் மணி மது குடித்து விட்டு வீட்டுக்கு சென்றதாக தெரிகிறது. இதை வள்ளி தட்டி கேட்டுள்ளார். அப்போது 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த வள்ளி மரக்கட்டையால் தாக்கியதில் மணி இறந்து விட்டார். இவ்வாறு தெரிவித்தனர்.
Related Tags :
Next Story