கீழ்பென்னாத்தூரில், ரூ.7 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலாளர் கைது


கீழ்பென்னாத்தூரில், ரூ.7 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலாளர் கைது
x
தினத்தந்தி 8 Aug 2019 4:15 AM IST (Updated: 8 Aug 2019 12:26 AM IST)
t-max-icont-min-icon

கீழ்பென்னாத்தூரில் ரூ.7 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலாளரை போலீசார் கைது செய்தனர்.

கீழ்பென்னாத்தூர்,

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த கனபாபுரத்தில் ஊராட்சி செயலாளராக பணிபுரிந்து வருபவர் அமுதா (வயது 40). இந்த ஊராட்சியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூலம் குடிநீர் வினியோகம் செய்யும் பம்ப் ஆபரேட்டராக பணியாற்றி வருபவர் சம்பத் (45).

இவருக்கு கடந்த 6 மாத சம்பளம் நிலுவையில் இருந்து வந்துள்ளது. இதனால் அமுதாவிடம் சம்பளத்தை தருமாறு சம்பத் கேட்டுள்ளார். இதற்கு அமுதா ரூ.7 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது.

லஞ்சம் கொடுக்க விரும்பாத சம்பத் அதுகுறித்து திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை சம்பத்திடம் கொடுத்து அமுதாவிடம் வழங்குமாறு கூறினர்.

இதையடுத்து கீழ்பென்னாத்தூரில் வசித்து வரும் அமுதாவின் வீட்டுக்கு சென்று அவரிடம் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை சம்பத் கொடுத்தார்.

அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் அருள்பிரசாத், மைதிலி மற்றும் போலீசார் கொண்ட குழுவினர் அமுதாவை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
1 More update

Next Story