குறுவட்ட அளவிலான விளையாட்டு போட்டி: கபடியில் அரும்பாவூர் அரசு பள்ளி மாணவிகள் முதலிடம்


குறுவட்ட அளவிலான விளையாட்டு போட்டி: கபடியில் அரும்பாவூர் அரசு பள்ளி மாணவிகள் முதலிடம்
x
தினத்தந்தி 8 Aug 2019 4:30 AM IST (Updated: 8 Aug 2019 12:20 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூரில் நடந்த குறுவட்ட அளவிலான விளையாட்டு போட்டியில், அரும்பாவூர் அரசு பள்ளி மாணவிகள் கபடியில் முதலிடம் பிடித்தனர்.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்ட பள்ளிக் கல்வி துறை சார்பாக பெரம்பலூர் மற்றும் குன்னம் குறுவட்ட அளவிலான 14, 17, 19 வயதிற்குட்பட்ட மாணவ- மாணவிகளுக்கான 16 வகையான விளையாட்டு போட்டிகள் நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. பெரம்பலூரில் உள்ள எம்.ஜி.ஆர். விளையாட்டு மைதானத்தில் இந்த போட்டிகள் நடந்து வருகிறது. இதில், நேற்று பெரம்பலூர் மற்றும் வேப்பந்தட்டை ஒன்றியங்களை சேர்ந்த பள்ளிகளில் இருந்து மாணவ-மாணவிகள் விளையாடினர். மாணவர்களுக்கு கை எறிபந்து போட்டியும், மாணவிகளுக்கு கை எறிபந்து, கோ-கோ, பூப்பந்தாட்டம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் 50-க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த அணிகள் கலந்து கொண்டு விளையாடின.

இதில், 19 வயதிற்குட்பட்ட மாணவிகளுக்கான கோ-கோ போட்டியில் வேப்பந்தட்டை அரசு மேல்நிலைப்பள்ளி அணியும், 17 வயதிற்குட்பட்ட மாணவிகளுக்கான கோ-கோ போட்டியில் மேலப்புலியூர் அரசு மேல்நிலைப்பள்ளியும், 14 வயதிற்குட்பட்ட மாணவிகளுக்கான கோ-கோ போட்டியில் பெரம்பலூர் இந்திரா நகர் ரோவர் மேல்நிலைப்பள்ளி அணியும் முதலிடம் பிடித்தன.

கபடியில் முதலிடம்

போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பெரம்பலூர் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ராஜேந்திரன், பெரம்பலூர் அரசினர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சுந்தரராஜூ ஆகியோர் சான்றிதழ்களை வழங்கினர்.

முன்னதாக நேற்று முன்தினம் நடந்த 14, 17, 19 வயதிற்குட்பட்ட மாணவிகளுக்கான கபடி போட்டியில் அரும்பாவூர் அரசு மேல்நிலைப்பள்ளி முதலிடம் பெற்று சாதனை படைத்தது. இன்று(வியாழக்கிழமை) பெரம்பலூர் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் செஸ் போட்டி நடைபெறுகிறது. குறுவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெறும் மாணவ-மாணவிகள் மாவட்ட அளவிலான போட்டிகளில் விளையாட உள்ளனர்.

Next Story