மாவட்ட செய்திகள்

ரூ.13 லட்சம் மோசடி; போலி வக்கீல் கைது + "||" + Rs 13 lakh fraud; Fake lawyer arrested

ரூ.13 லட்சம் மோசடி; போலி வக்கீல் கைது

ரூ.13 லட்சம் மோசடி; போலி வக்கீல் கைது
ரூ.13 லட்சம் மோசடியில் ஈடுபட்டது தொடர்பாக போலி வக்கீல் கைது செய்யப்பட்டார்.
செங்கல்பட்டு,

சென்னை வேங்கைவாசல் பகுதியை சேர்ந்தவர் ஜெயபால் (வயது 72). இவர் அந்த பகுதியில் கட்டுமான பணி நடத்துவதற்காக ஒருவரை நியமித்து வேலை பார்த்து வந்தார். பணி தொடர்பாக ஜெயபாலுக்கும் கட்டுமான பணி ஒப்பந்ததாரருக்குமிடையே சிக்கல் ஏற்படவே ஜெயபால் நீதி கேட்டு கோர்ட்டை நாடுவதற்காக வக்கீல் ஒருவரை தேடினார்.


அப்போது தனது உறவினர் ஒருவர் மூலமாக காஞ்சீபுரம் மாவட்டம் செங்கல்பட்டு கே.கே.நகரில் உள்ள ஏசு பாதம் (40) என்பவரது அறிமுகம் கிடைத்தது. அப்போது ஏசு பாதம் உங்கள் வழக்கை நான் முடித்து தருகிறேன் என்று செங்கல்பட்டு மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து தங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வாங்கி தருகிறேன் என்றும் நயவஞ்சகமாக பேசி கொஞ்சம் கொஞ்சமாக ரூ.13 லட்சத்தை பெற்றுள்ளார். ஆனால் வழக்கு மட்டும் முடியவில்லை இதனால் ஏசுபாதம் மீது சந்தேகம் அடைந்த ஜெயபால் நேராக கே.கே நகரில் உள்ள ஏசுபாதத்தின் வீட்டுக்கு சென்று கேட்டுள்ளார். அவர் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனால் இருவருக்குமிடையே வாக்குவாதம் முற்றி ஒரு கட்டத்தில் கைகலப்பானது. இதில் ஜெயபால் காயம் அடைந்தார்.

இது குறித்து ஜெயபால் செங்கல்பட்டு தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் ஏசுபாதத்தை அழைத்து விசாரித்ததில் அவர் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்னர் ஆந்திர மாநிலத்தில் வக்கீலுக்கு படித்தார் என்பதும் தேர்ச்சி பெறவில்லை என்பதும் தெரியவந்தது. தொடர்ந்து அவர் செங்கல்பட்டு பகுதியில் தன்னை வக்கீல் என கூறிக்கொண்டு இது போன்று மோசடியில் ஈடுபட்டுள்ளார் என்பது தெரியவந்தது.

மேலும் அவர் இது போன்று எத்தனை பேரை ஏமாற்றியுள்ளார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதையடுத்து போலீசார் ஏசு பாதத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.