5 இடங்களில் ஒருங்கிணைந்த சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும் - அமைச்சர் கே.சி.கருப்பணன் தகவல்


5 இடங்களில் ஒருங்கிணைந்த சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும் - அமைச்சர் கே.சி.கருப்பணன் தகவல்
x
தினத்தந்தி 8 Aug 2019 3:45 AM IST (Updated: 8 Aug 2019 12:52 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு மாவட்டத்தில் 5 இடங்களில் ஒருங்கிணைந்த சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும் என்று அமைச்சர் கே.சி.கருப்பணன் கூறினார்.

பவானி,

பவானி சங்கமேஸ்வரர் கோவில் அருகே உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று கைத்தறி நெசவாளர்களுக்கான மருத்துவ முகாம் நடைபெற்றது.

அமைச்சர் கே.சி.கருப்பணன் முகாமை தொடங்கி வைத்து மத்திய அரசின் முத்ரா திட்டத்தின் கீழ் 20 பேருக்கு தலா ரூ.50 ஆயிரம் கடன் உதவித் தொகைக்கான காசோலையை வழங்கினார்.

முன்னதாக அமைச்சர் கே.சி.கருப்பணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இலவச வேட்டி சேலை நெய்யும் திட்டத்தின் கீழ் கைத்தறி நெசவாளர்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லாதவாறு, அவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப நெய்வதற்கு துணிகள் வழங்கப்பட்டு வருகிறது.

கைத்தறிக்கு போக மீதியிருக்கும் துணிகள்தான் விசைத்தறிக்கு வழங்கப்பட்டு வருகிறது.

ஆறுகளில் சாயக்கழிவுகள் கலப்பதை தடுக்க ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 5 இடங்களில் ரூ.750 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும். அதற்கான திட்டப்பணிகள் ஐஐடியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பவானியில் 2 இடங்களிலும், நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் 2 இடங்களிலும், குமாரபாளையம் பகுதியில் ஒரு இடத்திலும் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்படும்.

ஈரோடு மாவட்டம் பண்ணாரியில் தற்போது ஜவுளி பூங்கா அமைக்க பணிகள் நடைபெற்று வருகிறது. விநாயகர் சதுர்த்தியையொட்டி தயார் செய்யப்படும் சிலைகள் தடைசெய்யப்பட்ட ரசாயனங்களால் உருவாக்கப்பட்டால் மாவட்ட நிர்வாகம் மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

தி.மு.க மற்றும் கூட்டணிக் கட்சிகளைச் சார்ந்த 38 பேர் பாராளுமன்றத்திற்கு சென்றுள்ளனர். அவர்களால் தமிழக மக்களுக்கு என்ன நல்லது செய்ய முடியும்?. பொய்யான வாக்குறுதிகளை தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலின் கூறி வாக்குகளை சேகரித்து வெற்றி பெற்றார். ஆனால் அவர்கள் வெற்றி பெற்றும் பயனில்லை. தற்போது அவர்கள் பாராளுமன்ற நேரத்தைதான் வீணடித்துக் கொண்டிருக்கிறார்கள். இதுதான் உண்மை.

இனி தமிழக மக்களிடம் பொய்யான வாக்குறுதி கொடுத்து வெற்றி பெற்றுவிடலாம் என்ற தி.மு.கவின் கணக்கு பலிக்காது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story