சீர்காழி தாலுகா அலுவலக வளாகத்தில் பூட்டி கிடக்கும் ஆதார் சேவை மையம் பொதுமக்கள் அவதி


சீர்காழி தாலுகா அலுவலக வளாகத்தில் பூட்டி கிடக்கும் ஆதார் சேவை மையம் பொதுமக்கள் அவதி
x
தினத்தந்தி 7 Aug 2019 10:45 PM GMT (Updated: 7 Aug 2019 8:13 PM GMT)

சீர்காழி தாலுகா அலுவலக வளாகத்தில் ஆதார் சேவை மையம் பூட்டி கிடப்பதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.

சீர்காழி,

சீர்காழியில் உள்ள தாலுகா அலுவலக வளாகத்திலும், நகராட்சி அலுவலக வளாகத்திலும் ஆதார் சேவை மையம் கடந்த சில ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் சீர்காழி நகராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியம், கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியம், வைத்தீஸ்வரன்கோவில் பேரூராட்சி, செம்பனார்கோவில் ஒன்றியம் ஆகியவற்றுக்கு உட்பட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், ஆதார் அட்டையில் பெயர் சேர்த்தல்-நீக்குதல், பெயர் திருத்தம், முகவரி மாற்றம், புதிய ஆதார் அட்டை எடுத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்கின்றனர். இதனால் இந்த மையத்திற்கு தினமும் மேற்கண்ட பகுதிகளை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்து பயன்பெற்றனர்.

நடவடிக்கை

இந்த நிலையில் சீர்காழி தாலுகா அலுவலகம் முன்பு செயல்பட்டு வந்த ஆதார் சேவை மையம் கடந்த 10 நாட்களாக எவ்வித முன்அறிவிப்பும் இன்றி பூட்டி கிடக்கிறது. இதனால் ஆதார் சேவை மையத்திற்கு வரும் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். மேலும், ஆதார் அட்டை தொடர்பான பணிகளை மேற்கொள்ள முடியாமல் அவதிப்படுகின்றனர். தினமும் வந்து செல்லும் பொதுமக்கள் ஆதார் சேவை மையம் திறக்கப்படுமோ? என்று நீண்ட நேரம் காத்திருக்கும் அவல நிலையும் ஏற்படுகிறது.

இங்குள்ள ஆதார் சேவை மையம் பூட்டியே கிடப்பதால், நகராட்சி வளாகத்தில் செயல்படும் ஆதார் சேவை மையத்தில் தினமும் பொதுமக்களின் கூட்டம் அலைமோதுகிறது. கூட்டம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் இடையே தள்ளு-முள்ளு ஏற்படுகிறது. மேலும் ஆதார் அட்டை தொடர்பான பணிகளை மேற்கொள்ள ஏராளமான பொதுமக்கள் குவிவதால் நகராட்சி பணிகளும் பாதிக்கப்பட்டு வருகிறது. எனவே சீர்காழி தாலுகா அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வந்த ஆதார் சேவை மையத்தை மீண்டும் திறந்து பயன்பாட்டிற்கு விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story