கடலில் உடலை வீசினர்: தொழில் அதிபர் கொலையில் பெண் வக்கீல் கைது


கடலில் உடலை வீசினர்: தொழில் அதிபர் கொலையில் பெண் வக்கீல் கைது
x
தினத்தந்தி 7 Aug 2019 10:45 PM GMT (Updated: 7 Aug 2019 8:47 PM GMT)

சென்னை அடையாறில் தொழில் அதிபரை கொன்று, உடலை கடலில் வீசிய வழக்கில் தலைமறைவாக இருந்த பெண் வக்கீல் கைது செய்யப்பட்டார்.

அடையாறு,

சென்னை அடையாறை சேர்ந்தவர் சுரேஷ் பரத்வாஜ் (வயது 50). தொழில் அதிபரான இவர், அடையாறு இந்திராநகர் முதல் அவென்யூவில் வயதான தனது இரு சித்திகளுடன் வசித்து வந்தார்.

கடந்த ஜூன் மாதம் 21-ந் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற பரத்வாஜ், அதன்பிறகு வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் அடையாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து பரத்வாஜை தேடி வந்தனர்.

கடலில் கொன்று வீச்சு

இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், பரத்வாஜ் வீட்டில் வேலை செய்து வந்த இளம்பெண்ணை, அவருடன் சேர்த்து வைப்பதாக கூறி அடையாறில் உள்ள வக்கீல் பிரீத்தி என்பவர் பரத்வாஜியிடம் ரூ.65 லட்சம் வரை பறித்ததாக தெரிகிறது.

ஆனால் சொன்னபடி அந்த பெண்ணை தன்னுடன் சேர்த்து வைக்காததால் பணத்தை திரும்ப தரும்படி பரத்வாஜ் கேட்டதால் ஏற்பட்ட தகராறில் வக்கீல் பிரீத்தி காசிமேடை சேர்ந்த பிரகாஷ் (30) மற்றும் அவரது கூட்டாளிகள் 5 பேருடன் சேர்ந்து பரத்வாஜை காசிமேடு கடற்கரையில் இருந்து ஒரு படகில் ஏற்றி சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவுக்கு கடலுக்குள் அழைத்துச்சென்று அங்கு வைத்து துடுப்பு கட்டையால் அவரை அடித்துக்கொன்று, உடலை கடலில் வீசியது தெரிந்தது.

இந்த வழக்கில் கூலிப்படையை சேர்ந்த பிரகாஷ், சுரேஷ் (40), மனோகர் (45), ராஜா (30), சந்துரு (29) மற்றும் சதீஷ் (30) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியாக கூறப்பட்ட வக்கீல் பிரீத்தி தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தார்.

வக்கீல் கைது

இந்த நிலையில் அடையாறு துணை கமிஷனர் பகலவன் உத்தரவின் பேரில், உதவி கமிஷனர் வினோத் சாந்தாராம் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படை போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் அடையாறு இந்திரா நகரில் பதுங்கி இருந்த வக்கீல் பிரீத்தியை தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர்.

பிரீத்தி, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியின் மகள் ஆவார். திருமணமான அவர், தனது கணவரை விட்டு பிரிந்து மகளுடன் தனியாக வசித்து வந்தார். கைதான பிரீத்தியை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Next Story