மாவட்ட வளக்குழு அமைத்து, அங்கன்வாடி மையங்களுக்கு அடிப்படை வசதிகள்


மாவட்ட வளக்குழு அமைத்து, அங்கன்வாடி மையங்களுக்கு அடிப்படை வசதிகள்
x
தினத்தந்தி 8 Aug 2019 4:00 AM IST (Updated: 8 Aug 2019 2:18 AM IST)
t-max-icont-min-icon

மாவட்ட அளவில் வளக்குழு அமைத்து அங்கன்வாடி மையங்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரப்பட இருப்பதாக கடலூரில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் அன்புசெல்வன் தெரிவித்தார்.

கடலூர்,

கடலூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டத்தின் மூலம் போஷன் அபியான் திட்டம் செயல்படுத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் அன்புசெல்வன் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் கலெக்டர் அன்புசெல்வன் பேசியதாவது:-

மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகத்தின் மூலம் 8.3.2018 அன்று பிரதம ரால் தேசிய ஊட்டச்சத்து குழுமம் அமைக்கப்பட்டது.

இது ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட பணிகள், திட்ட இலக்குகள், ஊட்டச்சத்து குறைபாட்டால் ஏற்படும் சிசு மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களின் இறப்பு விகிதத்தை குறைத்தல், குழந்தைகள் எடை குறைவாக பிறப்பதை குறைத்தல், குழந்தைகள் மற்றும் வளர் இளம் பெண்களுக்கு ரத்தசோகை ஏற்படாமல் தடுக்க வழிவகை செய்தல், ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத மாவட்டமாக கடலூர் மாவட்டத்தை மேம்படுத்துவது ஆகும்.

மேலும், மாவட்ட அளவிலான வளக்குழு அமைக்கப்பட்டு, அக்குழுவில் உள்ள ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் அங்கன்வாடி குழந்தைகளின் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் தரமான பாதுகாப்பான அங்கன்வாடி மையங்களை கட்டுமானம் செய்து தருதல், தண்ணீர், சுற்றுச்சுவர், கழிவறை மற்றும் மின்வசதிகளை அமைத்து தருதல் ஆகிய பணிகள் ஊரக வளர்ச்சித்துறை, வருவாய்த்துறை, தேசிய சுகாதார குழுமம், பள்ளிக்கல்வித்துறை, சமூகநலத்துறை, மகளிர் திட்டம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம், உணவு பாதுகாப்புத்துறை ஆகிய துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்ட அலுவலர் பழனி, உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) ஆனந்தன், மாவட்ட சமூக நல அலுவலர் அன்பழகி மற்றும் துறை அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Next Story