ஹாசன் டவுனில், மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் உரசியது: சக்கரத்தில் சிக்கி தொழிலாளி சாவு சமூக வலைத்தளங்களில் வைரலாகும் விபத்து வீடியோ


ஹாசன் டவுனில், மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் உரசியது: சக்கரத்தில் சிக்கி தொழிலாளி சாவு சமூக வலைத்தளங்களில் வைரலாகும் விபத்து வீடியோ
x
தினத்தந்தி 8 Aug 2019 2:55 AM IST (Updated: 8 Aug 2019 2:55 AM IST)
t-max-icont-min-icon

ஹாசன் டவுனில், மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் உரசியதில் தவறி விழுந்த தொழிலாளி பஸ்சின் சக்கரத்தில் சிக்கி இறந்தார். விபத்து தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஹாசன், 

ஹாசன் தாலுகா பூவனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் தேவராஜ்(வயது 37). தொழிலாளி. இந்த நிலையில் நேற்று காலை தேவராஜ் மோட்டார் சைக்கிளில் ஹாசன் டவுனுக்கு சென்றார். ஹாசன் டவுன் சாலேகாமே ரோட்டில் சென்ற போது அவரது செல்போன் எண்ணுக்கு ஒரு அழைப்பு வந்தது. இதனால் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு அவர் செல்போனை எடுத்து பேசினார். பின்னர் தேவராஜிக்கு தெரிந்தவர் ஒருவரும் அங்கு வந்ததால் அவரிடம் பேசிக் கொண்டு இருந்தார். பின்னர் அங்கிருந்து செல்வதற்காக மோட்டார் சைக்கிளை தேவராஜ் இயக்கினார்.

இந்த சந்தர்ப்பத்தில் பின்னால் வந்த அரசு பஸ், மோட்டார் சைக்கிள் மீது உரசியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த தேவராஜ், அரசு பஸ்சின் பின்பக்க சக்கரத்தில் சிக்கினார். இதனால் அவர் மீது சக்கரம் ஏறி, இறங்கியது. இதில் உடல்நசுங்கிய அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

விபத்து வீடியோ

இதனை பார்த்து அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். விபத்து குறித்து அறிந்த ஹாசன் போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தேவராஜின் உடலை கைப்பற்றி விசாரித்தனர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஹாசன் டவுன் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அரசு பஸ் டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் உரசுவதும், பின்னர் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழும் தேவராஜ் பஸ் சக்கரத்தில் சிக்கி உயிரிழக்கும் காட்சிகளும் சமூக வலைத்தளங்களில் வேகமாக வைரலாக வருகிறது. இது காண்போர் நெஞ்சை பதை பதைக்க வைத்து உள்ளது.

Next Story