காதலிக்க மறுத்ததால் ஆத்திரம்: இளம்பெண்ணின் படத்தை ஆபாசமாக சித்தரித்து முகநூலில் வெளியிட்ட வாலிபர் போலீசார் கைது செய்து விசாரணை


காதலிக்க மறுத்ததால் ஆத்திரம்: இளம்பெண்ணின் படத்தை ஆபாசமாக சித்தரித்து முகநூலில் வெளியிட்ட வாலிபர் போலீசார் கைது செய்து விசாரணை
x
தினத்தந்தி 8 Aug 2019 2:58 AM IST (Updated: 8 Aug 2019 2:58 AM IST)
t-max-icont-min-icon

காதலிக்க மறுத்ததால் இளம்பெண்ணின் படத்தை ஆபாசமாக சித்தரித்து முகநூலில் வெளியிட்ட வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சிவமொக்கா,

சிவமொக்கா மாவட்டம் பத்ராவதி தாலுகா ஜிங்க் லைன் காலனி பகுதியை சேர்ந்தவர் சச்சின் (வயது 24). இவர் கார்வாரில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்தார். ஆனால் அந்த படிப்பை பாதியிலேயே கைவிட்டு அவர் தனது சொந்த ஊருக்கு திரும்பி வந்தார். இந்த நிலையில், சச்சின் அந்தப்பகுதியை சேர்ந்த ஒரு இளம்பெண்ணை காதலித்து வந்ததாக தெரிகிறது. இதனால் அவர், தினமும் அந்த இளம்பெண்ணை பின்தொடர்ந்து சென்று தன்னை காதலிக்கும்படி வற்புறுத்தி வந்துள்ளார்.

ஆனால் சச்சினின் காதலை அந்த இளம்பெண் ஏற்கவில்லை என தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த சச்சின், தன்னை காதலிக்க மறுத்த இளம்பெண்ணை பழிவாங்க முடிவு செய்தார்.

முகநூலில் ஆபாச படம்

அதன்படி, சச்சின் அந்த இளம்பெண்ணின் பெயரில் போலியாக முகநூல் (பேஸ்புக்), இன்ஸ்டாகிராம் பக்கங்களை தொடங்கி உள்ளார். பின்னர் அவர், இளம்பெண்ணின் படத்தை ஆபாசமாக சித்தரித்து அதனை முகநூல், இன்ஸ்டாகிராம் பக்கங்களில் வெளியிட்டுள்ளார். அத்துடன் அந்த படங்களை இளம்பெண்ணின் உறவினர்கள், நண்பர்கள் பார்க்கும் அவர் களுக்கும் ‘டேக்’ செய்திருந்தார். இதனை பார்த்து அந்த இளம்பெண் மற்றும் அவருடைய உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து இளம்பெண்ணின் பெற்றோர், பத்ராவதி போலீசில் புகார் கொடுத்தனர். அதில், தங்கள் மகளின் படத்தை ஆபாசமாக சித்தரித்து ஒருவர் முகநூலில் வெளியிட்டுள்ளதாகவும், அதுபற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினார்கள்.

வாலிபர் கைது

இதுகுறித்து பத்ராவதி போலீசார் வழக்குப்பதிவு செய்து, முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் ஐ.டி.யை வைத்து விசாரித்தனர். அப்போது சச்சின் தான், இளம்பெண் பெயரில் போலியாக முகநூல், இன்ஸ்டாகிராம் பக்கங்கள் தொடங்கி இளம்பெண்ணின் படத்தை ஆபாசமாக சித்தரித்து வெளியிட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story