கூட்டணி ஆட்சியில் பெயருக்கு தான் முதல்-மந்திரியாக இருந்தேன் குமாரசாமி பேச்சால் பரபரப்பு


கூட்டணி ஆட்சியில் பெயருக்கு தான் முதல்-மந்திரியாக இருந்தேன் குமாரசாமி பேச்சால் பரபரப்பு
x
தினத்தந்தி 8 Aug 2019 3:21 AM IST (Updated: 8 Aug 2019 3:21 AM IST)
t-max-icont-min-icon

கூட்டணி ஆட்சியில் பெயருக்கு தான் முதல்-மந்திரியாக இருந்தேன் என்றும், தன்னால் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை என்றும் குமாரசாமி கூறினார். அவரது பேச்சு தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பெங்களூரு,

ஜனதா தளம்(எஸ்) கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கூட்டம் பெங்களூருவில் உள்ள அரண்மனை மைதானத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தை கட்சியின் தேசிய தலைவர் தேவேகவுடா தொடங்கி வைத்தார். இதில் முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி கலந்து கொண்டு பேசியதாவது:-

எனக்கு அதிகாரம் தேவை இல்லை. மக்களின் அன்பு, பாசம் வேண்டும். என்னிடம் இருந்து தொண்டர்கள் விலகி செல்கிறார்கள் என்பதற்காக முதல்-மந்திரியாக இருந்தபோது நான் கண்ணீர் விட்டேன். கூட்டணி அரசு கவிழ்ந்த பிறகு ஜனதா தளம்(எஸ்) கடினமான காலத்தில் இருக்கிறது. தலைவர்கள், நிர்வாகிகள் கருத்து வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு கட்சியை பலப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட வேண்டும்.

காய்ச்சல் இருக்கிறது

நான் முதல்-மந்திரியாக இருந்தபோது, சட்டவிரோத செயல்களுக்கு அனுமதி வழங்கவில்லை என்பதற்காக சிலர் விலகி சென்றுள்ளனர். முன்னாள் மந்திரி சா.ரா.மகேசை ஏன் வில்லனாக சித்தரிக்கிறார்கள் என்று தெரியவில்லை. என்னால் அவருக்கு ஒரு பைசா வேலை கூட ஆகவில்லை. மைசூரு மாவட்டத்தில் ஒரு அதிகாரியின் இடமாற்றத்திற்கு அவர் என்னிடம் வரவில்லை.

அவர் என்னுடன் இருப்பதே தவறா?. நான் தற்போது காய்ச்சலால் அவதிப்படுகிறேன். சிகிச்சை எடுத்துக் கொண்டு இந்த கூட்டத்திற்கு வந்துள்ளேன். இங்கு தொண்டர்களை பார்த்த பிறகு காய்ச்சல் போய்விட்டது. விவசாயிகள் மற்றும் கூலித்தொழிலாளர்கள் தனியாரிடம் பெற்ற கடனை தள்ளுபடி செய்ய ஒரு சட்டத்தை இயற்றி அமல்படுத்தியுள்ளோம்.

பெயருக்கு தான் முதல்-மந்திரி

இந்த சட்டத்தின் பயன் தகுதியானவர்களுக்கு கிடைக்க கட்சி சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் ஒரு அலுவலகம் திறந்து நிர்வாகிகள் செயலாற்ற வேண்டும். கூட்டணி ஆட்சியில் நான் பெயருக்கு தான் முதல்-மந்திரியாக இருந்தேன். என்னால் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை.

எனது மகன் நிகில் குமாரசாமி தேர்தலில் போட்டியிட்டபோது, ‘நிகில் எல்லிதியப்பா‘ (நிகில் எங்கப்பா இருக்கிற) என்று கூறி கேலி செய்தனர். சமூக வலைத்தளங்களில் தீவிரமாக பரப்பினர். இப்போது வடகர்நாடகத்தில் மழை வெள்ளத்தில் சிக்கி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் முதல்-மந்திரி எடியூரப்பா எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லை. இப்போது நான் கேட்க வேண்டும், எடியூரப்பா நீங்கள் எங்கே?.

மக்களுக்கு தான் இழப்பு

குடகு மாவட்டத்தில் கடந்த 2018-ம் ஆண்டு கனமழை பெய்து பெரிய பாதிப்புகள் ஏற்பட்டன. அந்த மாவட்ட பொறுப்பு மந்திரியாக இருந்த சா.ரா.மகேஷ் அங்கேயே ஒரு மாதம் தங்கியிருந்து மக்களுக்கு உதவிகளை செய்தார். நான் அந்த மாவட்டத்திற்கு 5 முறை சென்று ஆய்வு மேற்கொண்டேன்.

வீடுகளை இழந்த குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் செலவில் வீடுகளை கட்டி கொடுத்தோம். அரசு திட்டங்களுக்கு நிலங்கள் வழங்கியவர்களுக்கு 5 மடங்கு அதிகமாக விலை கொடுத்தோம். ஆனால் யாரும் ஒரு வார்த்தை கூட என்னை பாராட்டவில்லை. கூட்டணி அரசு கவிழ்ந்ததால் எனக்கு ஒன்றும் நஷ்டம் இல்லை. மக்களுக்கு தான் இழப்பு.

நான் பணியவில்லை

எடியூரப்பா அரசு அதிகாரிகளை இடமாற்றம் செய்து வருகிறது. பெங்களூரு வளர்ச்சி ஆணையத்திற்கு ஒரு அதிகாரியை எடியூரப்பா நியமித்துள்ளார். அவர் வெளிப்படையாக செயல்படக்கூடியவரா?. அவரது கடந்த கால பின்னணி என்ன?. எனக்கு பா.ஜனதா கட்சி மூலம் அதிக அழுத்தம் கொடுக்கப்பட்டது. நான் பணியவில்லை.

இவ்வாறு குமாரசாமி பேசினார்.

இந்த கூட்டத்தில் தேவேகவுடா பேசும்போது. “நமது கட்சியை விட்டு யார் வெளியேறினாலும் அதை பற்றி நான் கவலைப்பட மாட்டேன். கட்சியில் உள்ளூர் நிர்வாகிகளுக்கு பொறுப்புகள் வழங்கப்படும். மற்றவர்களை குறை சொல்லி காலத்தை விரயமாக்க மாட்டேன். துமகூருவில் நான் தோல்வி அடைந்தது, எனக்கு கிடைத்த ஆசி. என்னை தோல்வி அடைய செய்தவர்களுக்கு நல்லது நடக்கட்டும். அத்தகையவர்களுக்கு கெட்டது நடக்க வேண்டும் என்று நான் கூற மாட்டேன்“ என்றார்.

Next Story