பெண்ணுடன் மேயர் கைகலப்பில் ஈடுபட்டாரா? நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் வலியுறுத்தல்
பெண்ணுடன் மும்பை மேயர் கைகலப்பில் ஈடுபட்டதாக கூறி அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது.
மும்பை,
மும்பை சாந்தாகுருசை சேர்ந்தவர் மாலாநாகம் (வயது52). இவரது மகன் சங்கேத். கடந்த ஞாயிற்றுக்கிழமை பெய்த கனமழையின் போது தாய், மகன் இருவரும் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர். இந்த சம்பவத் தால் கோபம் அடைந்த அப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
இந்த சம்பவத்தை அறிந்து மேயர் விஸ்வநாத் மகாதேஸ்வர் அங்கு வந்தார். அப்போது அங்கு திரண்டிருந்தவர்கள் மேயர் விஸ்வநாத் மகாதேஸ்வரை சூழ்ந்து கொண்டனர்.
வைரலாகும் வீடியோ
அப்போது பெண் ஒருவர் மக்களுக்கு உதவி தேவைப்படும்போது எங்கு சென்றிருந்தீர்கள் என ஆவேசமாக கேள்வி எழுப்பினார். அதே கேள்வியை மேயரின் முன்னால் வந்து இன்னொரு பெண்ணும் கேட்டார். இதனால் கோபம் அடைந்த மேயர் விஸ்வநாத் மகாதேஸ்வர் இப்படி ரவுடித்தனம் பண்ணாதே என அந்த பெண்ணின் கையை பிடித்து திருக்கி கைகலப்பில் ஈடுபட்டதாக தெரிகிறது.
இதை அங்கிருந்த யாரோ செல்போனில் படம் பிடித்து உள்ளனர். தற்போது இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மானபங்க வழக்கு
மேயரின் இந்த செயலுக்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்து உள்ளது. மாநில மகளிரணி காங்கிரஸ் செயல் தலைவர் யசோமதி தாக்கூர், மேயர் விஸ்வநாத் மகாதேஸ்வர் அதிகார ஆணவத்தில் செயல்பட்டு உள்ளார். அவர் மீது மானபங்க வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
இதேபோல காங்கிரஸ் மகளிர் அணியினர் பாந்திராவில் நேற்று மேயரை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.
Related Tags :
Next Story