மழைக்காலத்துக்கு முன் காரைக்கால் மாவட்டத்தில் 100 குளங்கள் தூர்வாரப்படும் - கலெக்டர் விக்ராந்த் ராஜா உறுதி


மழைக்காலத்துக்கு முன் காரைக்கால் மாவட்டத்தில் 100 குளங்கள் தூர்வாரப்படும் - கலெக்டர் விக்ராந்த் ராஜா உறுதி
x
தினத்தந்தி 7 Aug 2019 11:06 PM GMT (Updated: 7 Aug 2019 11:06 PM GMT)

காரைக்கால் மாவட்டத்தில் மழைக்காலத்துக்கு முன் 100 குளங்கள் தூர்வாரப்படும் என்று கலெக்டர் விக்ராந்த்ராஜா தெரிவித்தார்.

காரைக்கால்,

புதுச்சேரி மாநிலத்தில் நீர்வளத்தை பாதுகாக்கும் நோக்கில் நீர்நிலைகளை தூர்வாரி பராமரிக்கவேண்டும் என்று அதிகாரிகளுக்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி உத்தரவிட்டார். அதன்பேரில் காரைக்கால் மாவட்ட கலெக்டர் விக்ராந்த் ராஜா நீர்நிலைகளை பாதுகாக்க முக்கியத்துவம் அளித்துவருகிறார்.

காரைக்கால் மாவட்ட பொதுப்பணித்துறை சார்பில் கோட்டுச்சேரி சட்டமன்ற தொகுதியில் உள்ள பிடாரி அம்மன் கோவில் குளம் தூர்வாரும் பணி கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இப்பணி நிறைவு பெற்றதை தொடர்ந்து குளத்தின் கரையில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் விக்ராந்த் ராஜா கலந்துகொண்டு மரக்கன்றுகள் நட்டார். அப்போது அவர் பேசியதாவது:-

காரைக்கால் மாவட்டம் முழுவதும் ஒவ்வொரு அரசு துறையும், தனியார் தொழிற்சாலைகளும், பொதுமக்களும் ஒன்று சேர்ந்து, தங்கள் பகுதியில் உள்ள குளம், வடிகால் வாய்க்கால்களை தூர்வாரி மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க வேண்டும் என வேண்டுகோள் விடப்பட்டது.

அதன்படி காரைக்காலில் இதுவரை 25 குளங்கள் தூர்வாரப்பட்டு மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது. மழைக்காலம் தொடங்கும் முன் மாவட்டம் முழுவதும் சுமார் 100 குளங்களை தூர்வாரி, மரக்கன்றுகள் நட மாவட்ட நிர்வாகம் முடிவு செய்து, அதற்கான நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. தூர்வாரப்பட்ட குளங்களில் குப்பைகளை கொட்டக்கூடாது. கழிவுநீரை விடக்கூடாது. இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்கவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் சுரேஷ் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.


Next Story