தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மேற்கு மராட்டியம் வெள்ளத்தில் மிதக்கிறது 16 பேர் பலி
மராட்டியத்தின் மேற்கு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் அங்குள்ள பல பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. வெள்ளத்தில் சிக்கி 16 பேர் உயரிழந்து உள்ளனர்.
மும்பை,
மராட்டியத்தில் மேற்கு மாவட்டங்களான கோலாப்பூர், சோலாப்பூர், சத்தாரா, சாங்கிலி, புனேயில் கடந்த ஒரு வார காலமாக பலத்த மழை பெய்து வருகிறது. இதில் கோலாப்பூர், சாங்கிலி மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. நேற்றும் கனமழை காரணமாக இந்த இரு மாவட்டங்களில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
குறிப்பாக கோலாப்பூர் மாவட்டத்தில் பல நகர்ப்புறங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. 342 பாலங்களும் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. மேலும் 204 கிராமங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. இதனால் மும்பை-பெங்களூரு, கோலாப்பூர்-ரத்னகிரி உள்ளிட்ட தேசிய நெடுஞ்சாலைகள் மூடப்பட்டு உள்ளன. படகுகள், ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்புபணி நடந்து வருகிறது.
16 பேர் பலி
கோலாப்பூர் மாவட்டத்தில் 53 ஆயிரம் மக்களும், சாங்கிலி மாவட்டத்தில் 51 ஆயிரம் பேரும், புனே மாவட்டத்தில் 1,300பேரும் தாழ்வான பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர்.
இவ்வாறு மேற்கு மராட்டிய மாவட்டங்களில் மொத்தம் 1 லட்சத்து 32 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டு உள்ளனர். மேற்கண்ட மாவட்டங்களில் கடந்த ஒரு வார காலத்தில், கனமழைக்கு 16 பேர் உயிரிழந்து இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
மேற்கு மராட்டியத்தில் ஆறுகளில் ஏற்படும் வெள்ளப்பெருக்கால் பல பகுதிகள் மூழ்கி வரும் நிலையில் இன்னும் 3 அல்லது 4 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.
Related Tags :
Next Story