தஞ்சை மாநகராட்சி பகுதியில் 150 கடைகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்


தஞ்சை மாநகராட்சி பகுதியில் 150 கடைகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
x
தினத்தந்தி 9 Aug 2019 4:30 AM IST (Updated: 8 Aug 2019 10:35 PM IST)
t-max-icont-min-icon

தஞ்சை மாநகராட்சி பகுதியில் 150 கடைகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

தஞ்சாவூர்,

தஞ்சை மாநகரம் ஸ்மார்ட் சிட்டியாக அறிவிக்கப்பட்டு பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு கட்டமாக சாலை ஒரங்களில் போக்குவரத்துக்கு இடையூறாக ஆக்கிரமித்து போடப்பட்டுள்ள கடைகளும் அகற்றப்பட்டு வருகின்றன. அதன்படி பழைய பஸ் நிலையம் அருகே அண்ணாசிலை அருகில் இருந்து பனகல் கட்டிடம் செல்லும் சாலை மற்றும் ஆபிரகாம் பண்டிதர் சாலையிலும் உள்ள கடைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக ஆக்கிரமித்து கடைகள் போடப்பட்டு இருந்தன.

இதனை அகற்றுமாறு மாநகராட்சி அதிகாரிகள் கடந்த 3 நாட்களுக்கு முன்பு சம்பந்தப்பட்ட கடைக்காரர்களுக்கு தெரிவித்தனர். ஆனால் கடைகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் இருந்தது. இதையடுத்து மாநகராட்சி ஆணையர் ஜானகிரவீந்திரன் உத்தரவின் பேரில் மாநகராட்சி அதிகாரிகள் நேற்று ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

அதன்படி பனகல் கட்டிடம் செல்லும் சாலை மற்றும் ஆபிரகாம்பண்டிதர்சாலையில் கடைகளில் போடப்பட்டு இருந்த ஆக்கிரமிப்புகளும் அகற்றப்பட்டன. அதன்படி 150-க்கும் மேற்பட்ட கடைகளில் ஆக்கிரமித்து போடப்பட்டு இருந்த கீற்று கொட்டகைகள், தகர ஷீட்டுகள் அகற்றப்பட்டு மாநகராட்சி லாரிகளில் ஏற்றப்பட்டு கொண்டு செல்லப்பட்டன.

இதில் ஆபிரகாம் பண்டிதர் சாலையில் முகப்பு பகுதியில் பெட்டிக்கடை மற்றும் தேனீர் கடை செயல்பட்டு வந்தது. அந்த கடையின் முன்பகுதியில் தகரத்தால் ஆன ஷீட் போடப்பட்டும், சுற்றிலும் இரும்புக்கம்பிகள் போடப்பட்டு அறை போல கட்டப்பட்டு இருந்தது அகற்றப்பட்டன.

அந்த கடை இருந்த இடத்தின் தரைதளத்தில் செங்கல்கள் போடப்பட்டு இருந்தன. அதன் மையப்பகுதியில் துவாரமும் அதன் மேல் இரும்பினால் ஆன மூடியும் போடப்பட்டு இருந்தது. அதனை திறந்து பார்த்த போது அது பெரிய தொட்டி போல காணப்பட்டது. அதில் தண்ணீர் பாட்டில்கள், அடுப்பு மற்றும் கடைகளுக்கு தேவையான பொருட்கள் வைக்கப்பட்டு குடோன் போல பயன்படுத்தியதும் தெரிய வந்தது. இதையடுத்து அதில் இருந்த பொருட்களும் அகற்றப்பட்டன. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு போலீசாரும் அதிக அளவில் குவிக்கப்பட்டு இருந்தனர்.

Next Story