அத்திவரதரை தரிசிக்க வந்த பக்தர்கள் தவிப்பு போக்குவரத்து வசதி இல்லாததால் 5 கி.மீ. தூரம் நடந்தே சென்றனர்


அத்திவரதரை தரிசிக்க வந்த பக்தர்கள் தவிப்பு போக்குவரத்து வசதி இல்லாததால் 5 கி.மீ. தூரம் நடந்தே சென்றனர்
x
தினத்தந்தி 9 Aug 2019 4:30 AM IST (Updated: 8 Aug 2019 10:56 PM IST)
t-max-icont-min-icon

ஐதராபாத்தில் இருந்து காஞ்சீபுரத்துக்கு சிறப்பு ரெயிலில் அத்திவரதரை தரிசிக்க வந்த ஆயிரம் பக்தர்கள் வாகன வசதி இல்லாததால் தவித்தனர். இதனால் 5 கி.மீ. தூரம் நடந்தே நகருக்குள் சென்றனர்.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் கடந்த மாதம் (ஜூலை) 1-ந்தேதி முதல் அத்திவரதர் தரிசன வைபவ நிகழ்ச்சி நடந்து வருகிறது. முதல் 31 நாட்கள் சயன நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலித்த அத்திவரதர், இம்மாதம் 1-ந்தேதி முதல் நின்ற நிலையில் காட்சி அளித்து வருகிறார்.

நாளுக்கு நாள் காஞ்சீபுரம் வரும் பக்தர்களின் கூட்டமும் அதிகரித்து வருகிறது. தற்போது திருப்பதியையே விஞ்சும் அளவுக்கு கட்டுக்கடங்காத வகையில் பக்தர்கள் கூட்டம் வருகிறது. பக்தர்களின் வசதிக்காக மின்சார ரெயில்கள் கூடுதலாக இயக்கப்படுவதுடன், வெளியூர்களில் இருந்தும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

அந்தவகையில் நேற்றுமுன்தினம் இரவு 9.30 மணியளவில் ஐதராபாத்தில் இருந்து காஞ்சீபுரத்துக்கு சிறப்பு ரெயில் ஒன்று இயக்கப்பட்டது. இதில் முன்பதிவு செய்த ஆயிரம் பக்தர்கள் குடும்பத்துடன் பயணம் மேற்கொண்டனர். இந்த ரெயில் நேற்று காலை 11 மணியளவில் காஞ்சீபுரம் ரெயில் நிலையம் வந்தடைந்தது.

ரெயிலில் வந்த ஆயிரம் பக்தர்களும் ரெயில் நிலையத்தை விட்டு வெளியே வந்தனர். ஆனால் நேற்று பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் பைபாஸ் சாலையில் இருந்து வாகனங்கள் எதுவும் காஞ்சீபுரம் நகருக்குள் அனுமதிக்கப்படவில்லை.

வி.ஐ.பி. பாஸ் ஒட்டப்பட்டிருந்த கார்கள் மட்டுமே நகருக்குள் அனுமதிக்கப்பட்டன. இதேநேரத்தில் சிறப்பு ரெயிலில் வந்த பக்தர்கள் ஆயிரம் பேரும் அங்கு கூடினர். அவர்கள் நகருக்குள் செல்ல வாகனங்களை எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் அங்கிருந்த போலீசார் வாகனங்கள் எதுவும் வராது என்று அறிவித்ததால், மூட்டை முடிச்சுகளுடன் 5 கி.மீ. தூரம் நடந்தே நகருக்குள் நுழைந்தனர்.

ஒரு சில ஆட்டோக்கள் அங்கு வந்தாலும், நபர் ஒருவருக்கு ரூ.100 கட்டணமாக கேட்டனர். பேரம் பேசியும் டிரைவர்கள் உடன்படாததால், ஆட்டோவில் ஏறாமல் நடந்தே நகருக்குள் சென்றனர்.

தங்கும் விடுதிகளும் ஏற்கனவே ஆன்லைனில் முன்பதிவு செய்யப்பட்டு நிரம்பிவிட்டதால் அவர்கள் தங்குவதற்கு கூட இடமில்லாமல் தவித்தனர்.

இதுகுறித்து வாரங்கல்லை சேர்ந்த கோவர்தன் என்ற பக்தர் கூறுகையில், “அத்திவரதரை தரிசிக்கும் ஆவலில் வாரங்கல்லில் இருந்து நாங்கள் குடும்பத்துடன் வருகிறோம். எங்களை போல் ஏராளமானோர் ரெயிலில் வந்துள்ளனர். ஆனால் ரெயில் நிலையத்தில் இருந்து ஊருக்குள் நுழைய வாகன வசதி செய்துதரப்படவில்லை. மேலும் தங்கும் விடுதிகளும் நிரம்பிவிட்டது என்று கூறுகிறார்கள். எனவே எங்கு தங்குவது? என்று தெரியவில்லை”, என்று வருத்தத்துடன் கூறினார்.

Next Story