ஈரோட்டில், தக்காளி விலை கடும் வீழ்ச்சி- குப்பையில் கொட்டப்படும் அவலம்


ஈரோட்டில், தக்காளி விலை கடும் வீழ்ச்சி- குப்பையில் கொட்டப்படும் அவலம்
x
தினத்தந்தி 9 Aug 2019 4:15 AM IST (Updated: 9 Aug 2019 12:59 AM IST)
t-max-icont-min-icon

ஈரோட்டில் தக்காளி விலை கடும் வீழ்ச்சி அடைந்ததால் வியாபாரிகள் குப்பையில் கொட்டினார்கள்.

ஈரோடு,

ஈரோடு நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட்டில் அனைத்து வகையான காய்கறிகளும் சில்லரை விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஈரோடு, திருச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய பகுதிகளில் இருந்தும், கர்நாடக மாநிலத்தில் இருந்தும் காய்கறிகளை மொத்தமாக வாங்கி வந்து வியாபாரிகள் விற்பனை செய்கிறார்கள்.

இதில் தாளவாடி, கிருஷ்ணகிரி, ஓசூர், கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தக்காளி விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருவதால் தக்காளியை விவசாயிகள் அதிகமாக அறுவடை செய்து வருகிறார்கள். இதனால் மார்க்கெட்டுக்கு தக்காளியின் வரத்து அதிகரிக்க தொடங்கியது.

வரத்து அதிகமானதால் தக்காளியின் விலை வீழ்ச்சி அடைந்தது. அதிலும் கடந்த 2 நாட்களாக தக்காளியின் வரத்து இரு மடங்காக உயர்ந்தது. தற்போது தக்காளி ஒரு கிலோ ரூ.10-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதுகுறித்து வியாபாரி ஒருவர் கூறும்போது, “கடந்த 2 மாதங்களாக தக்காளியின் விலை அதிகமாக இருந்தது. ஜூன் மாதத்தில் ஒரு கிலோ தக்காளி ரூ.50 வரை விற்பனையானது. தற்போது தக்காளியின் விலை கடும் வீழ்ச்சி அடைந்ததாலும் வரத்து அதிகமான காரணத்தால் விற்பனை ஆகாமல் தேங்கி கிடக்கிறது. 2 நாட்களுக்கு மேல் தக்காளி அழுகி விடுவதால், விற்பனை ஆகாத தக்காளிகளை வியாபாரிகள் குப்பையில் கொட்டி வருகின்றனர்”, என்றார்.

Next Story