திருச்சியில் சுழற்றி அடித்த புழுதிக்காற்று இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதி


திருச்சியில் சுழற்றி அடித்த புழுதிக்காற்று இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதி
x
தினத்தந்தி 9 Aug 2019 4:15 AM IST (Updated: 9 Aug 2019 1:08 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி மாநகரில் சுழற்றி அடித்த புழுதிக்காற்றால் இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.

திருச்சி,

ஆடி காற்றுக்கு அம்மியே நகரும் என்பது பழமொழி. ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு உகந்த மாதம் மட்டுமல்ல. காற்றுக்கும் உகந்த மாதம். ஆடி மாதம் பிறந்து 23 நாட்கள் ஆன நிலையில், பெரிய அளவில் காற்று வீசவில்லை. ஆனால், நேற்று திருச்சி மாநகரில் புழுதி பறக்கும் வகையில் சூறைக்காற்று வீசியது. காற்றினால் சாலையில் வாகனங்கள் செல்ல முடியாத அளவில் புழுதி பறந்தது.

புழுதியில் இருந்து கிளம்பிய மண் துகள் சாலையில் சென்ற இருசக்கர வாகன ஓட்டிகளை பதம் பார்த்தது. இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து சென்றவர்களுக்கு பெரிய பாதிப்பு இல்லை. ஆனால், சாலையில் இருசக்கர வாகனத்தை வேகமாக ஓட்டமுடியாமல் அவதிப்பட்டனர். சிலருக்கு கண்களில் மண்துகள் விழுந்து அவதிப்பட்டனர்.

காற்றில் பறந்த குப்பைகள்

திருச்சி பொன்மலை ஜி-கார்னர் செம்மண் திடலில் பலத்த காற்றினால் புழுதி விண்ணை முட்டும் அளவுக்கு பறந்தது. திருச்சி மாநகரில் பெரும்பாலான இடங்களில் குப்பை கொட்டுவதற்கு தொட்டி வைக்கப்பட வில்லை. இதனால், வீடுகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் சேகரமாகும் குப்பைகளை சாலையோரங்களிலும், தனியார் காலி மனைகளில் கொட்டி வருகிறார்கள்.

நேற்று வீசிய பலத்த காற்றினால் சாலையோர குப்பைகள் பறக்க தொடங்கின. பாலித்தீன் பைகள், காகிதங்கள், பழைய துணிகள் உள்ளிட்டவை காற்றில் பறந்து சென்று அருகில் உள்ள வீடுகளில் விழுந்தன. திருச்சி ரெயில்வே விளையாட்டு மைதானத்திலும் புழுதிக்காற்றால் மண்துகள் பறந்து சென்றன.

ஒடிந்த மரக்கிளைகள்

பொன்மலையில் உள்ள ரெயில்வேக்கு சொந்தமான காலி இடங்களில் இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடுவது வழக்கம். பலத்த காற்றினால் புழுதி பறந்ததால் இளைஞர்கள் யாரும் விளையாட வில்லை. திருச்சி ஜங்ஷன், பாரதியார் சாலை, மத்திய பஸ் நிலையம், பாலக்கரை, தென்னூர், உறையூர், திருச்சி சத்திரம் பஸ் நிலையம், காந்தி மார்க்கெட், கடை வீதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வீசிய பலத்த காற்றினால் இருசக்கர வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.

மேலும் சாலையோர கடைகளும் காற்றுக்கு பாதிப்புக்குள்ளானது. கடை முன்பு இறக்கப்பட்டிருந்த மேற்கூரைகள் காற்றில் பறந்தன. தென்னை மரங்கள் பலத்த காற்றால் சுழன்று, சுழன்று ஆடியது. பல இடங்களில் மரக்கிளைகள் ஒடிந்து விழுந்தன. வீதிகளிலும் புழுதிக்காற்று வீசியதால், வீடுகளில் உள்ள ஜன்னல்களை அடைத்து வைத்தனர்.

சாலையில் நடந்து சென்ற பெண்கள் புழுதியில் இருந்து தப்பித்து கொள்ளும் வகையில் முகத்தை சேலையால் மூடியபடியும், இளம்பெண்கள் துப்பட்டாவால் மூடியபடியும் சென்றனர். காற்றின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் சாலையில் போலீசார் ஏற்படுத்தி இருந்த இரும்பு தடுப்புகள் சாய்ந்து விழுந்தன. மேலும் சாலையோரம் நிறுத்தி இருந்த சைக்கிள்களும் சாலையில் சாய்ந்தன. சாலையில் எழும்பிய புழுதி சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவர் அருகே குப்பைபோல தேங்கி கிடந்தன.

Next Story