அனுமதியின்றி ரெயில் முன்பதிவு டிக்கெட்டுகள் விற்ற டிராவல்ஸ் நிறுவன உரிமையாளர் கைது


அனுமதியின்றி ரெயில் முன்பதிவு டிக்கெட்டுகள் விற்ற டிராவல்ஸ் நிறுவன உரிமையாளர் கைது
x
தினத்தந்தி 9 Aug 2019 3:45 AM IST (Updated: 9 Aug 2019 2:32 AM IST)
t-max-icont-min-icon

அனுமதியின்றி ரெயில் முன்பதிவு டிக்கெட்டுகள் விற்ற டிராவல்ஸ் நிறுவன உரிமையாளரை நாகர்கோவில் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் கைது செய்தனர்.

நாகர்கோவில்,

ஆரல்வாய்மொழி மிஷன் காம்பவுண்டு பகுதியை சேர்ந்தவர் அந்தோணி செல்வம் (வயது 57). இவர் ஆரல்வாய்மொழி மெயின் ரோட்டில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். அங்கு ஜெராக்ஸ் மெஷினும் வைத்து ஜெராக்ஸ் எடுத்தும் கொடுத்து வந்தார். இவரது கடையில் நாகர்கோவில் ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் இன்ஸ்பெக்டர் உபேந்திரகுமார் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சிதம்பரம் மற்றும் போலீசார் நேற்று திடீர் சோதனை நடத்தினர்.

சோதனையில், அவரது கடையில் இருந்து அனுமதியின்றி விற்பனைக்காக வைத்திருந்த 6 ரெயில்வே முன்பதிவு டிக்கெட்டுகள் மற்றும் காலாவதியான 8 டிக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட முன்பதிவு டிக்கெட்டுகளின் மதிப்பு ரூ.16 ஆயிரத்து 766 ஆகும்.

கைது

அதாவது, ஐ.ஆர்.டி.சி. எனப்படும் ஆன்லைன் மூலம் ரெயிலில் செல்ல முன்பதிவு டிக்கெட் எடுக்கும் இணையதளத்தில், அந்தோணி செல்வம் தனக்கு என ஒரு கணக்கு வைத்துள்ளார். இந்த கணக்கு வைத்திருப்போர் ரெயிலில் செல்ல முன்பதிவு டிக்கெட் எடுக்க வேண்டுமே, தவிர அதனை விற்க கூடாது. அப்படி செய்தால் அது சட்டப்படி குற்றமாகும்.

ஆனால், இவர் தனது கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு ரெயிலில் செல்ல முன்பதிவு செய்வதும், அதனை கமிஷன் அடிப்படையில் விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து நாகர்கோவில் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்தோணி செல்வத்தை கைது செய்தனர். 

Next Story