கோவையில் விடிய விடிய கொட்டித்தீர்த்த மழை - பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு


கோவையில் விடிய விடிய கொட்டித்தீர்த்த மழை - பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
x
தினத்தந்தி 9 Aug 2019 4:15 AM IST (Updated: 9 Aug 2019 4:20 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் விடிய விடிய கொட்டித்தீர்த்த மழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

கோவை,

கோவை மாவட்டத்தில் கடந்த திங்கட்கிழமை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் தடுப்பணைகள், குளங்கள், குட்டைகளுக்கு தண்ணீர் சென்று வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

இந்த நிலையில் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவில் பெய்யத்தொடங்கிய மழை விடிய விடிய பெய்தது. பின்னர் காலை நேரத்தில் சிறிது நேரம் நின்ற மழை பின்னர் காலை 8 மணியில் இருந்து தொடர்ந்து பெய்து கொண்டே இருந்தது.

இதன் காரணமாக கோவையில் உள்ள முக்கிய ரோடுகளான அவினாசி ரோடு, திருச்சி ரோடு, சத்தி ரோடு, மேட்டுப்பாளையம் ரோடு உள்பட அனைத்து ரோடுகளின் ஓரத்தில் மழைநீர் ஆறுபோன்று ஓடியது.

கோவை அவினாசி ரோட்டில் உள்ள மேம்பாலத்தின் கீழ்ப்பகுதியில் இருக்கும் சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கியது. அதுபோன்று வடகோவை மேம்பாலத்தின் கீழ் தண்ணீர் தேங்கியது. இதனால் அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் செல்ல முடியாமல் பொதுமக்கள் அவதியடைந்தனர்.

மேலும் மாநகர பகுதியில் பல இடங்களில் சாக்கடை கால்வாயில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக மழைநீர் சரியாக செல்ல முடியாமல் ரோட்டில் தேங்கியது. அவினாசி ரோட்டில் தண்ணீர் அதிகமாக தேங்கியதால் அந்த வழியாக சென்ற வாகனங்கள் அனைத்தும் தண்ணீரை பீய்ச்சி அடித்தபடி சென்றன.

தொடர்ந்து மாலை வரை மழை பெய்து கொண்டே இருந்ததால் பள்ளிகள், கல்லூரிகள் முடிந்ததும் மாணவ-மாணவிகள் சிலர் குடைகளை பிடித்தும், சிலர் மழையில் நனைந்தபடியும் வீடுகளுக்கு சென்றனர். தொடர் மழை காரணமாக பொதுமக்கள் பலர் வெளியே செல்லாமல் வீடுகளிலேயே முடங்கி கிடந்தனர். இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

மேலும் மாநகர பகுதியில் பாதாள சாக்கடை அமைக்க தோண்டப்பட்ட இடத்தில் சரியாக மூடாமல் விடப்பட்டதால் அந்தப்பகுதி சேறும், சகதியுமாக காட்சியளித்தது. இதனால் அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் பெரிதும் அவதியடைந்தனர்.

அதுபோன்று ரோடுகளில் தண்ணீர் தேங்கி நின்றதால் அதில் இருந்த குழிகளுக்குள் மழைநீர் நிரம்பி நின்றதால், அது தெரியாமல் அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் தவறி கீழே விழுந்து சிறு, சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்கள். பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் கால்வாயில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக மழைநீருடன் சாக்கடை நீர் கலந்து ரோட்டில் சென்றது.

கோவையில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் பலத்த மழை கொட்டியதால் நொய்யல் ஆற்றில் தண்ணீர் அதிகமாக செல்கிறது. இருகரைகளையும் தொட்டபடி செம்மண் நிறத்தில் வெள்ளம் பாய்ந்து செல்கிறது. இந்த ஆற்றில் உள்ள முதல் தடுப்பணையான சித்திரைச்சாவடியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

அதுபோன்று அனைத்து குளங்களுக்கு செல்லும் வாய்க்கால்களிலும் தண்ணீர் அதிகமாக செல்வதால் கோவை அருகே உள்ள கோளராம்பதி, கிருஷ்ணாம்பதி, செல்வாம்பதி உள்பட பல குளங்களுக்கு 40 சதவீத தண்ணீர் வந்து உள்ளது. இதன் காரணமாக குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன.

பேரூர் படித்துறை அருகே அடித்துச்செல்லப்பட்ட தரைப்பாலம் இன்னும் சரிசெய்யப்படாததால் பேரூரில் இருந்து வேடப்பட்டி, நாகராஜபுரம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளுக்கு செல்ல முடியவில்லை. அந்த வழியாக செல்லும் அனைத்து வாகனங்களும் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டு வருகின்றன.

அதுபோன்று கோவையை அடுத்த பட்டணம் பகுதியில் நொய்யல் ஆற்றில் தண்ணீருடன் நுரை பொங்கி செல்கிறது. இதனால் அந்த நுரை காற்றில் பறந்து அந்த வழியாக செல்பவர்கள் மீது விழுந்தது. இதனால் வாகனங்களில் சென்றவர்கள் பெரிதும் அவதியடைந்தனர்.

கோவையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலையில் இருக்கும் கோவை குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. எனவே அங்கு சுற்றுலா பயணிகள் செல்ல 4-வது நாளாக தடை விதிக்கப்பட்டதுடன், அங்கு யாரும் செல்வதை தடுக்க வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.

தொண்டாமுத்தூர் நரசீபுரம் அருகே வைதேகி அருவிக்கு செல்லும் வழியில் சோதனைச்சாவடி அருகில் மேட்டுப்பட்டிக்காடு என்ற இடத்தில் ஓடையில் அதிக வெள்ளம் சென்றது. இதனால் அங்கு கட்டப்பட்ட சிறிய பாலம் உடைந்தது.

அதுபோன்று சிறுவாணி ரோட்டில் உள்ள பச்சாபாளையம் பிரிவு அருகே காற்றுடன் மழை பெய்த தால் 50 ஆண்டு பழமை வாய்ந்த புளியமரம் முறிந்து ரோட்டில் விழுந்தது. இதனால் அந்தப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து அந்த மரம் அங்கிருந்து அகற்றப்பட்டதால் போக்குவரத்து சீரானது.

அதுபோன்று கோவை கோர்ட்டில் உள்ள ஒரு மரம் முறிந்து கார் மீது விழுந்ததால் அந்த கார் சேதமானது. மேலும் சில பகுதிகளில் மரங்கள் முறிந்து ரோட்டில் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கோவை மாவட்டம் வால்பாறையில் 8-வது நாளாக நேற்றும் மழை பெய்தது. இதனால் அங்குள்ள சோலையாறு அணைக்கு 13 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையின் நீர்மட்டம் 118 அடியாக உயர்ந்து உள்ளது. அங்குள்ள வாழைத்தோட்டம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளதால் வாழைத்தோட்டம் மற்றும் டோபி காலனி குடியிருப்பில் 200-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது.அதுபோன்று அங்குள்ள அரசு போக்குவரத்துக்கழக பணிமனையின் தடுப்புச்சுவர் உடைந்ததால் ஆற்று தண்ணீர் உள்ளே புகுந்தது. அங்கு சிக்கிக்கொண்ட ஊழியர்கள் கயிறு கட்டி மீட்கப்பட்டனர். வால்பாறை-பொள்ளாச்சி சாலையில் ஆங்காங்கே மரங்கள் விழுந்தும், மண் சரிவும் ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் ஸ்டேன்மோர் ஆத்துமட்டம் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. சின்னக்கல்லார் எஸ்டேட் பகுதிக்கு செல்லும் ரோட்டில் வனப்பகுதியில் இருந்து தண்ணீர் அதிகமாக வந்ததால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.ஆற்றங்கரையில் உள்ள 61 குடும்பங்களை சேர்ந்தவர்கள் அங்கிருந்து மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

மழை அளவு

கோவை மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி பெய்த மழை அளவு விவரம் (மி.மீட்டரில்) வருமாறு:-

கோவை விமான நிலையம்- 7.8

மேட்டுப்பாளையம்- 6

சின்கோனா- 155

சின்னக்கல்லார்- 226

வால்பாறை பி.ஏ.பி.- 138

வால்பாறை தாலுகா அலுவலகம்- 137

சோலையாறு- 165

ஆழியாறு- 16.4

சூலூர்- 4

பொள்ளாச்சி- 10

கோவை தெற்கு- 23.6

கோவை வேளாண் கல்லூரி-23.5

கோவை மாவட்டத்தில் மொத்தம் 912.30 மி.மீட்டர் மழை பெய்து உள்ளது. இதன் சராசரி 65.16 ஆகும்.

கோவை மாவட்டத்தில் கடந்த திங்கட்கிழமை முதல் மழை பெய்து வருவதால், நிலத்தடி நீர்மட்டம் 3 அடி உயர்ந்து உள்ளது. எந்தெந்த பகுதிகளில் எவ்வளவு அடி நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து உள்ளது என்பது குறித்து அதிகாரிகள் கணக்கெடுத்து வருகிறார்கள்.

Next Story