திருப்பூர் மாவட்டத்தில் மழை: நொய்யல் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு கரையோர மக்களுக்கு வெள்ளஅபாய எச்சரிக்கை
திருப்பூர் மாவட்டத்தில் பெய்து வரும் மழையால் நொய்யல் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேலும் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருப்பூர்,
திருப்பூர் மாநகரில் நேற்று காலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. லேசான சாரல் விழுந்தபடி இருந்தது. காலை 10.30 மணிக்கு தூறலுடன் மழை பெய்தது. மாநகர் முழுவதும் தூறலுடன் மழை பெய்து கொண்டே இருந்தது. இதன்காரணமாக இருசக்கர வாகன ஓட்டிகள் ரோட்டில் செல்ல மிகவும் சிரமம் அடைந்தனர். பலர் குடை எதுவும் எடுத்து வராததால் ஆங்காங்கே உள்ள டீக்கடை, பேக்கரி, ஓட்டல்களில் தஞ்சம் புகுந்தனர்.
பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள், ரோட்டோரம் உள்ள கடைகளின் ஓரமாக மக்கள் காத்திருந்தனர். ஆனால் மழை விடுவதாக இல்லை. தொடர்ந்து தூறலுடன் மழை பெய்து கொண்டே இருந்தது. ஒரு கட்டத்தில் காத்திருந்து பொறுமையிழந்தவர்கள் மழையில் நனைந்தபடியே சென்று தங்கள் வேலைகளை கவனிக்கத்தொடங்கினார்கள்.
மாலையும் மழை பெய்ததால் பள்ளி முடிந்து வீட்டுக்கு திரும்பும் மாணவ-மாணவிகள் சிரமம் அடைந்தனர். சில மாணவ-மாணவிகளே குடை கொண்டு வந்திருந்தனர். பல மாணவ-மாணவிகள் மழையில் நனைந்தபடியே பஸ் நிறுத்தங்களுக்கு சென்று பஸ்சில் ஏறி சென்றனர்.
அதுபோல் இரவு நேர தள்ளுவண்டி உணவுக்கடைக்காரர்கள் மழை காரணமாக கடை அமைக்க முடியாமல் சிரமம் அடைந்தனர். நேற்று பகலில் மாநகரில் ரோடுகளில் இருசக்கர வாகன ஓட்டிகள் நடமாட்டம் குறைவாக இருந்தது. பலர் வீடுகளிலேயே முடங்கினார்கள். காய்கறி மார்க்கெட்டுகளில் மக்கள் கூட்டம் குறைவாக இருந்தது.நேற்று இரவு வரை மழை நீடித்தது. இதன்காரணமாக மாநகர மக்களின் இயல்பு வாழ்க்கை நேற்று பாதிக்கப்பட்டது. கோவை பகுதியில் கனமழை காரணமாக அங்குள்ள நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் திருப்பூர் பகுதியில் நொய்யல் ஆற்றில் நீர்வரத்து அதிகமாக இருந்தது. இதைத்தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு வருவாய்த்துறை அதிகாரிகள், நொய்யல் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்தனர். தொடர்ந்து மழை பெய்வதால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால் கரையோர மக்கள் எச்சரிக்கையோடு இருக்குமாறு அறிவுறுத்தினார்கள்.
தொடர் மழை காரணமாக திருப்பூர் மாநகராட்சி 22-வது வார்டுக்கு உட்பட்ட பாப்பநாயக்கன்பாளையத்தில் பட்டத்தரசியம்மன் கோவில் அருகே நின்ற பழமையான வேப்ப மரம் நேற்று மாலை வேரோடு நடுரோட்டில் சாய்ந்தது. இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பழமையான வேப்பமரம் வேரோடு சாய்ந்ததால் அப்பகுதி மக்கள் கவலை அடைந்தனர். பின்னர் திருப்பூர் வடக்கு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று மரத்தை வெட்டி அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
சேவூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான ராமியம்பாளையம், தண்டுக்காரன்பாளையம், லூர்துபுரம், போத்தம்பாளையம், பாப்பாங்குளம், பவர்ஹவுஸ், வேட்டுவபாளையம், கருமாபாளையம், முறியாண்டம்பாளையம், உள்பட பல பகுதிகளில் நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அதை தொடர்ந்து காலை 9 மணி முதல் மிதமான சாரல் மழை பெய்தது.மழை தொடர்ந்து மாலை வரை நீடித்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பள்ளிக்கு சென்ற குழந்தைகளை பெற்றோர்கள் குடையுடன் அழைத்து வந்தனர்.
மங்கலத்தை அடுத்த சுற்றுவட்டாரப் பகுதிகளான நடுவேலம்பாளையம், பூமலூர், இச்சிப்பட்டி, சாமளாபுரம், இடுவாய், 63வேலம்பாளையம், பூமலூர், வேட்டுவபாளையம் ஆகிய பகுதிகளில் நேற்று காலை முதல் இரவு வரை தொடர்ச்சியாக சாரல் மழை பெய்தது. மேலும் மேற்குத்தொடர்ச்சிமலை, கோவை மாவட்டத்தில் தொடர்ந்து மழை காரணமாக நொய்யல் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மங்கலம் நால்ரோடு அருகே நொய்யல் ஆறு செல்கிறது. இப்பகுதியில் நொய்யல் ஆற்றின் குறுக்கே உள்ள நல்லம்மன் தடுப்பணை நிறைந்து வெள்ளம் அருவி போல் கொட்டுகிறது.
மேலும் நல்லம்மன் தடுப்பணை கரையில் அமைக்கப்பட்டுள்ள நல்லம்மன் கோவிலில் வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது. நொய்யல் ஆற்றில் மரக்கிளைகள், நுரையுடன் கூடிய வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
தாராபுரம் பகுதியில் மதியம் 1 மணியிலிருந்து இரவு 7 மணிவரை தொடர்ந்து தூறல் மழையாக பெய்து கொண்டிருந்தது. இந்த சாரல் மழை விவசாயிகளுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது என்று கூறினார்கள்.
அவினாசி, கருவலூர், நம்பியாம்பாளையம், வெள்ளியம்பாளையம், சுண்டக்காம்பாளையம், புதுப்பாளையம், வேலாயுதம்பாளையம், ஆட்டையாம்பாளையம், துலுக்கமுத்தூர், ஆலம்பாளையம், பழங்கரை, அவினாசிலிங்கம்பாளையம், ராயம்பாளையம், சின்னேரிபாளையம், வளையபாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் லேசான தூறல் மழை பெய்தது. இதையடுத்து பிற்பகல்2 மணியிலிருந்து இடைவிடாமல் மிதமான மழை பெய்தது.
இதனால் பொதுமக்கள் வெளியே செல்ல முடியாமல் வீட்டிலேயே இருந்தனர்.
Related Tags :
Next Story