மழையால் நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு: பாபநாசம்-சேர்வலாறு அணைகள் நீர்மட்டம் ‘கிடுகிடு’ உயர்வு


மழையால் நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு: பாபநாசம்-சேர்வலாறு அணைகள் நீர்மட்டம் ‘கிடுகிடு’ உயர்வு
x
தினத்தந்தி 9 Aug 2019 3:00 AM IST (Updated: 9 Aug 2019 2:38 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை மாவட்டத்தில் பெய்த மழையால் பாபநாசம், சேர்வலாறு அணைகளின் நீர்மட்டம் ‘கிடுகிடு‘ என உயர்ந்துள்ளது. குண்டாறு அணையும் நிரம்பி வழிகிறது.

நெல்லை, 

வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலும் மழை பெய்து வருகிறது.

நெல்லை, பாபநாசம், அம்பை, களக்காடு, சேரன்மாதேவி, நாங்குநேரி, ராதாபுரம், சங்கன்கோவில், களக்காடு, சிவகிரி, தென்காசி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் பரவலாக மழை பெய்தது. இதனால் அணைகளின் நீர்மட்டம் ‘கிடுகிடு‘ என உயர்ந்து வருகிறது.

பாபநாசம் அணைப்பகுதியில் 110 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது. நேற்று முன்தினம் அணையின் நீர்மட்டம் 65.90 அடியாக இருந்தது. இது நேற்று காலை நிலவரப்படி 77.50 அடியாக உயர்ந்தது. அதாவது ஒரே நாளில் பாபநாசம் அணையின் நீர்மட்டம் 11.6 அடி உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 8,881 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. வினாடிக்கு 154 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

சேர்வலாறு அணையின் நீர்மட்டம் நேற்று முன்தினம் 80.64 அடியாக இருந்தது. இது நேற்று காலையில் 108.59 அடியாக அதிகரித்து ஒரே நாளில் 27.95 அடி உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 8,881 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. வினாடிக்கு 47 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

மணிமுத்தாறு அணையின் நீர்மட்டமும் 50.20 அடியில் இருந்து 54 அடியாக உயர்ந்துள்ளது. இந்த அணைக்கு 1,958 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து 22.4 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

செங்கோட்டை அருகே கண்ணுப்புளிமெட்டு பகுதியில் குண்டாறு அணை உள்ளது. அந்த பகுதியில் நேற்று முன்தினம் இரவு 39 மி.மீ. மழை பதிவானது. இந்த அணையின் நீர்மட்டம் நேற்று முன்தினம் 32 அடியாக இருந்தது. நேற்று காலை நிலவரப்படி முழு கொள்ளளவான 36.10 அடியை எட்டி நிரம்பி வழிகிறது. அணைக்கு வினாடிக்கு 67 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அந்த தண்ணீர் அப்படியே திறந்து விடப்படுகிறது.

நெல்லை மாநகர பகுதியில் நேற்று காலை முதல் சாரல் மழை பெய்தது. நெல்லை சந்திப்பு பஸ் நிலைய பகுதியில் பள்ளிக்கூடம் மற்றும் கல்லூரிகளுக்கு சென்ற மாணவ-மாணவிகள் உள்பட ஏராளமானோர் குடைபிடித்தபடி சென்றனர்.

Next Story