சேலத்தில் கைத்தறி சிறப்பு கண்காட்சி-விற்பனை கலெக்டர் ராமன் தொடங்கி வைத்தார்


சேலத்தில் கைத்தறி சிறப்பு கண்காட்சி-விற்பனை கலெக்டர் ராமன் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 9 Aug 2019 4:15 AM IST (Updated: 9 Aug 2019 2:49 AM IST)
t-max-icont-min-icon

சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று கைத்தறி சிறப்பு கண்காட்சி மற்றும் விற்பனையை கலெக்டர் ராமன் தொடங்கி வைத்தார்.

சேலம்,

சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் 5-வது தேசிய கைத்தறி தினத்தையொட்டி கைத்தறி மற்றும் துணிநூல் துறையின் சார்பில் கைத்தறி சிறப்பு கண்காட்சி மற்றும் விற்பனை நேற்று நடந்தது. இதை மாவட்ட கலெக்டர் ராமன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். பின்னர் அவர் சிறப்பு விற்பனையை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

1905-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 7-ந் தேதி தொடங்கப்பட்ட சுதேசி இயக்கத்தின் நினைவாக கைத்தறி தொழிலின் முக்கியத்துவம் மற்றும் நாட்டின் சமூக பொருளாதார வளர்ச்சிக்கு அதன் பங்களிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், கைத்தறி தொழிலை மேம்படுத்தி, கைத்தறி நெசவாளர்களின் வருவாயை உயர்த்தவும், அவர்களின் பெருமையை அதிகரிக்கவும் தேசிய கைத்தறி தினம் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.

20 சதவீதம் தள்ளுபடி

கைத்தறிகளில் உற்பத்தி செய்யப்படும் சுத்த பட்டு சேலைகள், சேலம் வெண்பட்டு வேட்டிகள், பட்டு அங்கவஸ்திரம், பட்டு சர்ட்டிங், ஆர்கானிக் காட்டன் சர்ட்டிங், காட்டன் சேலைகள், ஆர்கானிக் காட்டன் சேலைகள், காட்டன் வேட்டிகள், படுக்கை விரிப்புகள், ஜமுக்காளம், துண்டுகள் மற்றும் கைக்குட்டைகள் ஆகியவை இயற்கையான பருத்தி இழை மற்றும் பட்டு இழை ஆகியவற்றை கொண்டு உற்பத்தி செய்யப்படுகிறது. இவைகள் கலை நுட்பத்துடனும், தனித்துவத்துடனும் உலக தரம் வாய்ந்த வகையில் கைத்தறிகளில் உற்பத்தி செய்யப்படுகிறது. கைத்தறி ரகங்களுக்கு 20 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

இந்த வாய்ப்பை பயன்படுத்தி பொதுமக்கள் மற்றும் அனைத்து துறை அலுவலர்களும் கைத்தறி ரகங்களை அதிகளவில் கொள்முதல் செய்ய வேண்டும். அனைத்து துறை அலுவலர்கள் அனைவரும் கைத்தறி ஆடை அணிந்து ஒத்துழைப்பு நல்க வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் கூறினார்.

இதனை தொடர்ந்து கைத்தறி மற்றும் துணி நூல் துறையின் சார்பில் ரூ.4¼ லட்சம் மதிப்பில் பிரதான் மந்திரி முத்ரா திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ராமன் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை துணை இயக்குனர் கிரிதரன் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story