வாலிபர்களுக்கு அரிவாள் வெட்டு, நடவடிக்கை எடுக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்
மானாமதுரை அருகே வாலிபர்களை அரிவாளால் வெட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மானாமதுரை,
மானாமதுரை அருகே உள்ள கிருஷ்ணராஜபுரத்தில் வசிக்கும் மக்களுக்கும், மற்றொரு பிரிவை சேர்ந்தவர்களுக்கும் இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்தது. இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமண வாழ்த்து சுவரொட்டி ஒட்டியது தொடர்பாக பிரச்சினை இருதரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதன் எதிரொலியாக நேற்று முன்தினம் இரவு கிருஷ்ணராஜபுரம் பகுதிக்குள் மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர், தெருவில் உட்கார்ந்து செல்போன் பார்த்து கொண்டிருந்த வீராச்சாமி மகன் சதீஷ்குமார்(வயது 25), முத்து மகன் சதீஷ்(25) ஆகிய இருவரையும் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடி விட்டனர். இதில் 2 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
இந்தநிலையில் இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுவதாகவும், போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை என கூறியும் கிருஷ்ணராஜபுரம் பகுதி மக்கள் மானாமதுரை பழைய பஸ் நிறுத்தம் அருகே நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். சாலை மறியலால் இந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த சிவகங்கை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மங்களேஸ்வரன், துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தலைமையில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.
அவர்கள் மறியலில் ஈடுபட்டவர்களிடம் இந்த சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இதுதொடர்பாக 2 பேரை கைது செய்துள்ளதாகவும் தெரிவித்தனர். இதையடுத்து மறியல் கைவிடப்பட்டது. இந்த சம்பவத்தால் மானாமதுரையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து கிராம தலைவர் சாத்தையா என்பவர் கூறும்போது, 2 ஆயிரம் பேருக்கு மேல் வசிக்கும் கிருஷ்ணராஜபுரத்தில் எங்கள் மீது அடிக்கடி தாக்குதல் நடந்து வருகிறது. இதுவரை நடந்த சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றார்.
Related Tags :
Next Story