பழைய துணிகளை வாங்குவது போல் வந்து கைவரிசை, வீடு புகுந்து 25 பவுன் நகை-ரூ.6½ லட்சத்தை கொள்ளையடித்த 3 பெண்கள்


பழைய துணிகளை வாங்குவது போல் வந்து கைவரிசை, வீடு புகுந்து 25 பவுன் நகை-ரூ.6½ லட்சத்தை கொள்ளையடித்த 3 பெண்கள்
x
தினத்தந்தி 9 Aug 2019 4:00 AM IST (Updated: 9 Aug 2019 4:20 AM IST)
t-max-icont-min-icon

பழைய துணிகளை வாங்குவது போல் வந்து ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் ரூ.6½ லட்சம், 25 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற 3 பெண்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த துணிகர கொள்ளை குறித்த விவரம் வருமாறு:-

காரியாபட்டி,

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே மல்லாங்கிணறு அருகே உள்ள தோணுகால் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 50). இவர் ஏலச்சீட்டு மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர் நேற்று காலை இருக்கன்குடி கோவிலுக்கு சென்றுள்ளார். அவருடைய மனைவி கருப்பாயி 100 நாள் வேலைக்கு சென்றுவிட்டார். மூத்த மகன் மாரிச்செல்வம்(19) வீட்டின் மாடியில் இருந்துள்ளார். அவர் வீட்டின் முன்புற கதவை பூட்டிவிட்டு சாவியை அங்கேயே ஒரு இடத்தில் வைத்துள்ளார்.

இந்தநிலையில் தோணுகால் கிராமத்திற்கு 3 பெண்கள் குழந்தையுடன் வந்துள்ளனர். அவர்கள் ஒரு சில வீடுகளில் பழைய துணி உள்ளதா? எனக்கேட்டு நோட்டமிட்டுள்ளனர். மதியம் முருகன் வீட்டுக்கு வந்த அவர்கள், வீட்டின் முன்புற கதவு பூட்டப்பட்டு இருந்ததையும், அதற்குரிய சாவி அதன் மேல்புறத்திலேயே இருந்ததையும் அறிந்துகொண்டனர். பின்னர் சாவியை எடுத்து நைசாக கதவை திறந்து உள்ளே சென்றனர்.

பின்னர் அங்கு பீரோவை திறந்து அதில் இருந்த பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்துள்ளனர். பீரோவை மீண்டும் பூட்டிவிட்டு சாவியையும் உடன் எடுத்துச் சென்றனர். வாசல் கதவை மீண்டும் பூட்டிய போது அந்த சத்தம் கேட்டு, மாடியில் இருந்த மாரிச்செல்வம் கீழே வந்து பார்த்துள்ளார். அப்போது, வீட்டு வாசலில் நின்றிருந்த பெண்களை பார்த்து ஏன் இங்கு நிற்கிறீர்கள்? எனக்கேட்டதற்கு குடிக்க தண்ணீர் கேட்டு வந்ததாக தெரிவித்துவிட்டு, 3 பெண்களும் அங்கிருந்து நைசாக சென்றுவிட்டனர்.

அவர்கள் மீது சந்தேகம் கொண்ட மாரிச்செல்வம் வீட்டுக்குள் சென்று எல்லாம் சரியாக இருக்கிறதா? என்று சோதனை செய்துள்ளார். பீரோ சாவியை காணாததால் தந்தைக்கு போன் செய்து பீரோ சாவியை பற்றி விசாரித்துள்ளார்.

பீரோ சாவி கிடைக்காததால் பின்னர் அருகில் இருந்தவர்கள் மூலம் பீரோவை உடைத்து பார்த்தபோது, பீரோவில் இருந்த ரூ.6½ லட்சம், 25 பவுன் நகைகள் கொள்ளை போனது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் 3 பெண்களையும் தேடினார். ஆனால் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்த சம்பவம் குறித்து மல்லாங்கிணறு போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்ட 3 பெண்களையும் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story