கே.ஆர்.எஸ்., கபினி அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு: தமிழகத்திற்கு காவிரியில் வினாடிக்கு 89 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறப்பு
நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக கே.ஆர்.எஸ்., கபினி அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது.
மைசூரு,
கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது. வட, தென் கர்நாடக பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் மாநிலத்தில் உள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. அணைகள், நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா கண்ணம்பாடி கிராமத்தில் கிருஷ்ணராஜசாகர்(கே.ஆர்.எஸ்) அணை உள்ளது. இதுபோல மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகா பீச்சனஹள்ளியில் உள்ள கபினி அணை உள்ளது.
கே.ஆர்.எஸ் அணையின் நீர்பிடிப்பு பகுதியாக குடகு, கபினி அணையின் நீர்பிடிப்பு பகுதியான கேரள மாநிலம் வயநாடு பகுதிகளில் தொடர்ந்து பலத்த மழை கொட்டி வருகிறது. இதனால் கே.ஆர்.எஸ்., கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது. இந்த 2 அணைகளில் இருந்து தான் தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடப்படுவது குறிப்பிடத்தக்கது.
வினாடிக்கு 89 ஆயிரம் கனஅடி நீர் செல்கிறது
நேற்று முன்தினம் கே.ஆர்.எஸ். அணைக்கு வினாடிக்கு 22,719 கனஅடி வீதமும், கபினிக்கு 18,417 கனஅடி வீதமும் தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இந்த நிலையில் அணைகளின் நீர் பிடிப்பு பகுதிகளில் இடை விடாது கொட்டி வரும் கன மழையால் நேற்று நீர்வரத்து மேலும் அதிகரித்தது. நேற்று காலை நிலவரப்படி 124.80 அடி உயரம் கொண்ட கே.ஆர்.எஸ். அணையில் 91 அடி நீர் இருந்தது. அணைக்கு வினாடிக்கு 31 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 4 ஆயிரம் கனஅடி தண்ணீர் விடப்பட்டு இருந்தது.
இதுபோல கடல் மடத்தில் இருந்து 2,284 அடி கொள்ளளவு கொண்ட கபினி அணையில் நேற்று காலை நிலவரப்படி 2,282 அடி தண்ணீர் இருந்தது. அணைக்கு வினாடிக்கு 85 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அந்த தண்ணீர் அப்படியே வெளியே திறந்து விடப்பட்டது. நீர்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை கொட்டி வருவதால் அணைகளுக்கு நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நேற்று காலை இரு அணைகளில் இருந்தும் காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு 89 ஆயிரம் கனஅடி தண்ணீர் சென்று கொண்டு இருந்தது. நேற்று முன்தினம் இரு அணைகளில் இருந்தும் 8,400 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story