வீட்டை வெள்ளம் சூழ்ந்ததால் 3 நாட்கள் கூரையின் மீது அமர்ந்து மரண போராட்டம் நடத்திய தம்பதி உருக்கமான தகவல்கள்
பெலகாவியில் வீட்டை வெள்ளம் சூழ்ந்ததால் 3 நாட்கள் கூரையின் மீது அமர்ந்து தம்பதி மரண போராட்டம் நடத்தி உள்ளனர். அந்த சம்பவம் பற்றி உருக்கமான தகவல்கள் வெளியாகி உள்ளன.
பெங்களூரு,
வட கர்நாடகத்தில் கனமழை பெய்து வருவதால் அப்பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக பெலகாவியில் வரலாறு காணாத மழை பெய்து பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த மழைக்கு அந்த மாவட்டத்தை சேர்ந்த 6 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
இந்த நிலையில் பெலகாவி தாலுகா கங்காபுரா என்ற கிராமத்தை சேர்ந்த காலேஷ்-ரத்னம்மா என்ற தம்பதி, கடந்த 5-ந் தேதி சிறிது தொலைவில் உள்ள தங்களின் விவசாய தோட்டத்திற்கு சென்றனர். அப்போது அங்கு கனமழை பெய்ததால், அவர்களின் சிறிய மண் கூரை வீட்டை ஒட்டியுள்ள கால்வாயில் மழைநீர் சற்று அதிகமாக சென்றது. மறுநாள் வீட்டுக்கு சென்றுவிடலாம் என்று கருதி அன்று இரவு அவர்கள் அந்த வீட்டிலேயே தங்கினர்.
கரைபுரண்டு ஓடியது
ஆனால் கனமழை இடைவிடாமல் பெய்ததால், அந்த கால்வாயில் தண்ணீர் அதிகளவில் கரைபுரண்டு ஓடியது. கால்வாய் நீர், அவர்களின் வீட்டை தொட்டபடி பாய்ந்து சென்றது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த தம்பதி, வீட்டின் கூரை மீது ஏறி அமர்ந்து கொண்டனர். அவர்களுக்கு உயிர் மீது பயம் வந்துவிட்டது.
நாம் இங்கிருந்து தப்பி செல்ல முடியுமா? என்று அவர்களுக்குள் கேள்வி எழுந்தது. காலேசுக்கு நீச்சல் தெரியும், என்பதால் அவரால் நீந்தி கரைசேர முடியும் என்று கருதினார். ஆனால் மனைவியை விட்டு, திரும்ப அவருக்கு மனமில்லை. நாளுக்குள் நாள் மழை கோரதாண்டவம் ஆடியது.
செத்தால் சேர்ந்து சாவோம்
இதனால் அந்த கால்வாயில் மழைநீர் சீறிப்பாய்ந்து சென்றது. இதை பார்த்த அவர்கள், நாம் இங்கிருந்து தப்பி செல்ல முடியாது, அதனால் முடிந்தவரை இந்த கூரை மீது அமர்ந்திருப்போம், யாராவது நம்மை மீட்க வருவார்கள் என்று அவர்கள் கருதினர். செத்தால் இருவரும் சேர்ந்து சாவோம், பிழைத்தாலும் சேர்ந்தே பிழைப்போம் என்று அவர்கள் முடிவு எடுத்தனர்.
உயிரை கையில் பிடித்துக் கொண்டு, நேரத்தை கடத்தினர். ஒவ்வொரு நிமிடத்தை கடப்பது என்பது அவர்களுக்கு ஒரு நாள் போன்று இருந்தது. குடிநீர், உணவு என எதுவும் இருக்கவில்லை. மழை பெய்தபடியே இருந்தது. தங்களின் உடல் மீது போர்வையை போர்த்தியபடி கூரையில் அமர்ந்திருந்தனர். இந்த நிலையில் திடீரென்று கூரை சறுக்கியதால், ரத்னம்மா வழுக்கி, மழைநீரில் தவறி விழுந்தார்.
எடியூரப்பாவின் கவனத்திற்கு...
உடனே அவரது கணவர், நீரில் குதித்து மனைவியை மீட்டு மேலே கொண்டு வந்து அமர வைத்தார். இப்படி ஒவ்வொரு வினாடியும் மரண வேதனையை அவர்கள் அனுபவித்தனர். கூரை மீது 2 பேர் உயிருக்கு போராடி வருவது பற்றி தகவல் முதல்- மந்திரி எடியூரப்பாவின் கவனத்திற்கு வந்தது. ஹெலிகாப்டர் மூலம் அவர்களை மீட்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் ஹெலிகாப்டர் கிடைக்கவில்லை.
அதன் பிறகு மாநில, தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் அந்த தம்பதியை மீட்க முடிவு செய்தனர். கால்வாய் மழைநீர் இரைச்சல் இட்டபடி சீறிப்பாய்ந்து ஆக்ரோஷமாக சென்றதை கண்ட மீட்பு குழுவினர் சற்று பயந்து போயினர். அந்த நீரில் படகை வெற்றிகரமாக செலுத்த முடியுமா? என்று சற்று தயக்கத்துடன் யோசித்தனர்.
கரையை வந்து தொட்டது
இருந்தாலும் மனதை திடப்படுத்திக் கொண்ட அந்த மீட்பு குழுவினர், நேற்று மோட்டார் படகு மூலம் அந்த கால்வாயின் ஒரு புறத்தில் இருந்து மற்றொரு புறத்திற்கு படகை செலுத்தினர். படகு வருவதை கண்டதும், மறுகரையில் வீட்டின் மீது அமர்ந்திருந்த தம்பதிக்கு லேசாக உயிர் திரும்பி வந்தது போல் உணர்ந்தனர்.
படகில் வந்த குழுவினர், அந்த தம்பதியை கீழே இறக்கி படகில் ஏற்றினர். 3 நாட்கள் குடிநீர், உணவு இல்லாததால் அவர்கள் மிகவும் சோர்வுடன் காணப்பட்டனர். அவர்களை தூக்கி படகில் போட்டுக்கொண்டு, சீறிப்பாய்ந்து வந்த மழைநீருக்கு எதிராக வெற்றிகரமாக எதிர்நீச்சல் போடுவது போல் தண்ணீரை கிழித்துக் கொண்டு அந்த படகு மீண்டும் கரையை வந்து தொட்டது. அந்த படகு கரையை நெருங்கும்போது, அங்கு கூடியிருந்த மக்கள் குரலை உயர்த்தி மிகுந்த ஆரவாரம் செய்தனர்.
உயிர் பிழைத்துள்ளோம்
படகில் இருந்து அந்த தம்பதியை கீழே இறக்கியதும், தயாராக இருந்த ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றி அழைத்துச் சென்று ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சைக்கு பிறகு அவர்கள் சோர்வில் இருந்து விடுபட்டு சகஜ நிலைக்கு திரும்பினர். இறைவன் அருளால் நாங்கள் உயிர் பிழைத்துள்ளோம் என்று அவர்கள் கண்ணீர்மல்க கூறினர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-
கடந்த 5-ந் தேதி எங்களின் விவசாய தோட்டத்திற்கு சென்றோம். வீட்டுக்கு திரும்பலாம் என்று நினைத்தோம். கனமழை பெய்து, அருகில் உள்ள கால்வாயில் அதிகளவில் மழைநீர் சென்றது. அதனால் மறுநாள் செல்லலாம் என்று நினைத்து அங்கேயே தங்கினோம். ஆனால் மழை இடைவிடாமல் பெய்ததால், கால்வாயில் மழைநீர் கரைபுரண்டு ஓடியது.
மறுஜென்மம்
எங்களின் வீட்டை தொட்டபடி கால்வாயில் நீர் சென்றது. இதனால் நாங்கள் பயந்துவிட்டோம். உயிர் தப்பிக்க வீட்டின் கூரை மீது ஏறி அமர்ந்து கொண்டோம். யாராவாவது நம்தை காப்பாற்ற வருவார்கள் என்று நாங்கள் எதிர்பார்த்து காத்திருந்தோம். ஆனால் 2 நாட்கள் ஆகியும் யாரும் வரவில்லை. உயிர் பிழைப்போம் என்ற நம்பிக்கை எங்களுக்கு போய்விட்டது. மண் வீடு என்பதால், எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழுந்துவிடும் என்ற பயம் இருந்தது.
செத்தால் இருவரும் ஒன்றாகவே சாவோம் என்று முடிவு எடுத்து, மனதை திடப்படுத்தி கொண்டு கூரை மீது அமர்ந்திருந்தோம். தொடர்ந்து மழை பெய்ததால், நரக வேதனையை அனுபவித்தோம். எப்படியோ இன்று (நேற்று) மீட்பு குழுவினர் வந்து எங்களை மீட்டு அழைத்து வந்துவிட்டனர். மறுஜென்மம் கிடைத்தது போல் நாங்கள் உணர்கிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story