மருத்துவ துறையில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது - அமைச்சர் பாஸ்கரன் பேச்சு
மருத்துவ துறையில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது என்று அமைச்சர் பாஸ்கரன் கூறினார்.
சிவகங்கை,
சிவகங்கை மாவட்ட பொது சுகாதார துறை சார்பில் மாணவ-மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்குதல் மற்றும் சிறப்பு மருத்துவ முகாம் சிவகங்கையை அடுத்த இடையமேலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் லதா தலைமை தாங்கினார். சுகாதாரத்துறை துணை இயக்குனர் யசோதாமணி வரவேற்று பேசினார்.
கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் பாஸ்கரன் மருத்துவ முகாமை தொடங்கி வைத்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கினார்.
பின்னர் அமைச்சர் பேசும்போது கூறியதாவது:-
ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்த காலகட்டத்தில் தமிழகத்தில் மருத்துவ துறையில் பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தினார். அதன் காரணமாகத்தான் தற்போது மருத்துவ துறையில் தமிழகம் இந்தியாவில் முன்னோடி மாநிலமாக திகழ்ந்து வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் உள்ள பெண்களின் முன்னேற்றத்திற்காக மகப்பேறு நிதியுதவி திட்டம், கர்ப்பிணிகளுக்கு நிதியுதவி மற்றும் பரிசு பெட்டகம் மற்றும் திருமண நிதியுதவி திட்டம் என பல்வேறு திட்டங்களை ஜெயலலிதா செயல்படுத்தினார்.
இதற்கு முன்பு சாதாரண மக்கள் உடல் நலக்குறைவு என்றால் சிவகங்கையில் உள்ள அரசு மருத்துமனைக்கு தான் செல்ல வேண்டும். ஆனால் தற்போது அனைத்து இடங்களிலும் சுகாதாரத்துறை மூலம் மருத்துவமனைகள் தொடங்கப்பட்டுள்ளது. அதிலும் 24 மணிநேரம் ஒரு செவிலியர் மருத்துவமனையில் இருக்கும் வகையில் மருத்துவமனைகள் செயல்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
இதைதொடர்ந்து அமைச்சர் பாஸ்கரன், கர்ப்பிணிகளுக்கு அம்மா பரிசு பெட்டகங்கள், தூய்மை பணியாளர்கள் பணி மேற்கொள்ள புகைத்தெளிப்பான் எந்திரங்கள் ஆகியவற்றை அமைச்சர் பாஸ்கரன் வழங்கினார்.
விழாவில் மருத்துவ சுகாதார பணிகள் துறை இணை இயக்குனர் இளங்கோ மகேஸ்வரன், குடும்ப நலப்பணிகள் துணை இயக்குனர் யோகவதி, பூச்சியியல் வல்லுனர் ரமேஷ், உதவி திட்ட அலுவலர் கமலேஸ்வரன், சுகாதார பயிற்சி மருத்துவர் ஆதவன் அரவிந்தன், வட்டார மருத்துவ அலுவலர் சித்தகிரி, சிவகங்கை தாசில்தார் கண்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர் ரஜினிதேவி, சுகாதார மேற்பார்வையாளர் வீரைய்யா, கூட்டுறவு வங்கி இயக்குனர்கள் சசிக்குமார், பாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story