அவினாசியில் காண்டிராக்டர் வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகை திருட்டு; மர்ம ஆசாமிகள் கைவரிசை


அவினாசியில் காண்டிராக்டர் வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகை திருட்டு; மர்ம ஆசாமிகள் கைவரிசை
x
தினத்தந்தி 10 Aug 2019 3:45 AM IST (Updated: 9 Aug 2019 9:59 PM IST)
t-max-icont-min-icon

அவினாசியில் பனியன் நிறுவன காண்டிராக்டரின் வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகை திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.

அவினாசி,

நெல்லை மாவட்டம் வள்ளியூரை சேர்ந்தவர் சிதம்பரம். இவருடைய மகன் பாண்டியன்(வயது 44). பனியன் நிறுவன தையல் காண்டிராக்டர். இவர் அவினாசி காமராஜ் நகர் அருகே ஐஸ் கடை வீதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 4-ந்தேதி பாண்டியன் தனது மனைவி கவுசல்யா(39) மற்றும் 2 குழந்தைகளுடன் வீட்டை பூட்டி விட்டு சொந்த ஊரான வள்ளியூரில் உள்ள கோவில் திருவிழாவுக்கு சென்றுவிட்டார். அதன்பிறகு திருவிழா முடிந்ததும் பாண்டியன் தனது குடும்பத்தினருடன் அவினாசியில் உள்ள தனது வீட்டுக்கு திரும்பி வந்தார்.

அங்கு வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது 2 அறையில் இருந்த பீரோக்களின் பூட்டும் உடைக்கப்பட்டு அதில் இருந்த 20 பவுன் நகைகளை காணவில்லை. யாரோ மர்ம ஆசாமிகள் பாண்டியன் குடும்பத்தினருடன் வெளியூர் சென்றிருப்பதை அறிந்து வீட்டு கதவை உடைத்து உள்ளே புகுந்து 20 பவுன் நகையை திருடி சென்று இருக்கிறார்கள்.

இது குறித்த புகாரின்பேரில் அவினாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். போலீஸ் மோப்ப நாய் டேவில் வரவழைக்கப்பட்டது. அந்த நாய் சம்பவம் நடந்த வீட்டில் இருந்து ரோட்டிற்கு சென்று சிறிது தூரம் ஓடி நின்று விட்டது. போலீஸ் துணை சூப்பிரண்டு தங்கராசு ( பொறுப்பு) மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் இளங்கோ தலைமையில் தனிப்படையினர் மர்ம ஆசாமிகளை தேடி வருகிறார்கள்.

Next Story