கூட்டணி தர்மத்தை கடைபிடிக்காத வைகோவை மக்கள் நிராகரிப்பார்கள் - மாணிக்கம்தாகூர் எம்.பி. பேட்டி


கூட்டணி தர்மத்தை கடைபிடிக்காத வைகோவை மக்கள் நிராகரிப்பார்கள் - மாணிக்கம்தாகூர் எம்.பி. பேட்டி
x
தினத்தந்தி 10 Aug 2019 4:30 AM IST (Updated: 9 Aug 2019 11:10 PM IST)
t-max-icont-min-icon

கூட்டணி தர்மத்தை கடைபிடிக்காத வைகோவை மக்கள் நிராகரிப்பார்கள் என விருதுநகரில் அளித்த பேட்டியில் மாணிக்கம்தாகூர் எம்.பி. கூறினார்.

விருதுநகர்,

விருதுநகரில் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம்தாகூர் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ இரண்டு முறை விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி மக்களால் நிராகரிக்கப்பட்டவர். அதை தெரிந்தும், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மதசார்ப்பற்ற கூட்டணி சார்பில் மாநிலங்களவைக்கு வைகோவை வெற்றி பெற செய்தார். மதசார்பற்ற கூட்டணி மூலம்தான் வைகோ மாநிலங்களவை உறுப்பினராகி உள்ளார். டெல்லி சென்றதும் அவர் பிரதமர் மோடி, பா.ஜ.க. தலைவர் அத்வானியை சந்தித்தார்.

காஷ்மீர் பிரச்சினையில் மாநிலங்களவையில் பேசிய வைகோ, காஷ்மீர் மக்களுக்கு காங்கிரஸ் துரோகம் செய்ததாக உண்மைக்கு புறம்பாக குற்றம்சாட்டியுள்ளார். கடந்த 70 ஆண்டுகளாக காஷ்மீர் மக்களுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியல் சட்டப்பிரிவு 370-ஐ காப்பாற்றியது காங்கிரஸ் கட்சி. இலங்கை பிரச்சினையில் தி.மு.க.வும், காங்கிரசும் துரோகம் செய்துவிட்டது என குற்றம் சாட்டி வந்த வைகோ, தற்போது காங்கிரஸ் இலங்கை மக்களுக்கு துரோகம் செய்து விட்டதாக கூறுகிறார். 17 ஆண்டு காலம் தி.மு.க. சார்பில் எம்.பி.யாக இருந்த வைகோ, கட்சிக்கு துரோகம் செய்ததை நாடு அறியும். காங்கிரஸ் எந்த காலத்திலும் யாருக்கும் துரோகம் செய்தது இல்லை.

காஷ்மீர் பிரச்சினையில் வைகோ பேசுவதற்கு மாநிலங்களவையில் 3 நிமிட நேரம் ஒதுக்கப்பட்டபோது, காங்கிரசை குற்றம் சாட்டி பேச போகிறேன், எனக்கு 10 நிமிடம் தாருங்கள் என அமித்ஷாவிடம் கேட்டார். பா.ஜ..க. தூண்டியதால்தான் வைகோ அவ்வாறு பேச தொடங்கினார். அவர் சென்னைக்கு வந்த பின்பும் காங்கிரசை குற்றம் சாட்டி பேசியதால் தான், நாங்களும் அவருக்கு பதில் சொல்ல வேண்டி உள்ளது.

கூட்டணியில் உள்ளவர்களின் குறைபாடுகளை வெளிப்படையாக பேசுவது இல்லை. ஆனால் வைகோ, உண்மைக்கு புறம்பாக பேசியதால் அவரைப்பற்றி பேச வேண்டியதாகிவிட்டது. கூட்டணி தர்மத்தை கடைபிடிக்காத வைகோவை மக்கள் நிராகரிப்பார்கள்.

மத்திய அரசு கடந்த 5-ந்தேதி திடீரென மாநிலங்களவையில் காஷ்மீர் பிரச்சினை பற்றிய மசோதாவை கொண்டு வந்தது. காங்கிரஸ் எம்.பி.க்கள் 12 பேர், கேரளா உள்ளிட்ட தொலைதூர மாநிலங்களில் இருந்து வர முடியாத நிலையில் இருந்ததால் எதிராக வாக்களிக்க முடியவில்லை. எனவே அதுபற்றி குற்றம் சொல்ல கூடாது.

அ.தி.மு.க. நாடக கம்பெனி போல் செயல்படுகிறது. அமைச்சர்களும் நடிகர்கள் போல் செயல்படுகிறார்கள். முதலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அ.தி.மு.க. அரசு தடுத்து நிறுத்த முயற்சி எடுக்கட்டும். அ.தி.மு.க. அரசின் செயல்பாட்டால் தமிழகம் பின்தங்கிவிட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story