பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு குந்தாரப்பள்ளி வாரச்சந்தையில் ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனை


பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு குந்தாரப்பள்ளி வாரச்சந்தையில் ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனை
x
தினத்தந்தி 9 Aug 2019 11:00 PM GMT (Updated: 9 Aug 2019 7:10 PM GMT)

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு குந்தாரப்பள்ளி வாரச்சந்தையில் ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்கப்பட்டன.

குருபரப்பள்ளி, 

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி செல்லும் சாலையில் உள்ளது குந்தாரப்பள்ளி கிராமம். இக்கிராமத்தில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் காய்கறி, ஆடுகள், மாடுகள் விற்பனை சந்தை நடைபெறுவது வழக்கம். குறிப்பாக ஆடுகள் மற்றும் மாடுகள் விற்பனை செய்யவும், வாங்கவும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரளா, ஆந்திரா, கர்நாடக மாநிலத்தில் இருந்து வியாபாரிகள், கால் நடைகள் வளர்ப்பவர்கள் அதிகளவில் வருவார்கள்.

இந்த நிலையில் வருகிற 12-ந் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனால் நேற்று குந்தாரப்பள்ளியில் வாரச்சந்தையில் வழக்கத்தை விட ஆடுகள் விற்பனையும், விலையும் அதிகமானது. ஆடுகள் எடைக்கு தகுந்தவாறு ரூ.8 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை விற்பனையானது. குறிப்பாக ஆந்திரா மாநிலம் குப்பம் பகுதியில் இருந்து அதிக எடைகள் கொண்ட ஆடுகள் விற்பனைக்கு வியாபாரிகள் கொண்டு வந்தனர்.

இதுதொடர்பாக ஆடு வியாபாரிகள் கூறியதாவது:-

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, உள்ளூர், வெளியூரில் இருந்து ஆயிரக்கணக்கான வியாபாரிகள் ஆடுகள், வாங்கவும் விற்கவும் வந்துள்ளனர். இந்த ஆண்டு பெங்களூருவில் இருந்து ஆடுகள் வாங்க வியாபாரிகள் குறைவாக வந்து இருந்தனர். இருப்பினும், கடந்த வாரத்தைவிட ஆடு ரூ.5 ஆயிரத்திற்கும் மேல் கூடுதல் விலைக்கு விற்பனையானது. இதனால் பண்டிகை தினத்தில் ஆடுக்கறி கிலோ விலை உயர வாய்ப்பு உள்ளது. இன்று(நேற்று) நடந்த சந்தையில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் ரூ.3 கோடிக்கு மேல் விற்பனை ஆனது. போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story