தேசிய குடற்புழு நீக்க தின விழா, மாணவர்கள் கை கழுவும் பழக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும்


தேசிய குடற்புழு நீக்க தின விழா, மாணவர்கள் கை கழுவும் பழக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும்
x
தினத்தந்தி 10 Aug 2019 3:45 AM IST (Updated: 10 Aug 2019 12:52 AM IST)
t-max-icont-min-icon

நோய்கள் வராமல் இருக்க மாணவர்கள் கை கழுவும் பழக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்று தேசிய குடற்புழு நீக்க தின விழாவில் வருவாய் அதிகாரி ரேவதி கூறினார்.

நாகர்கோவில்,

தேசிய குடற்புழு நீக்க தினம் நாகர்கோவில் எஸ்.எல்.பி. அரசு உயர்நிலைப்பள்ளியில் நடந்தது. விழாவில் மாவட்ட வருவாய் அதிகாரி ரேவதி பங்கேற்று குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க திட்டம் என்ற விழிப்புணர்வு கையேட்டை வெளியிட்டார். பின்னர் 240 மாணவ-மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்கினார்.

அதன்பிறகு அவர் பேசுகையில் கூறியதாவது:-

குழந்தைகளுக்கு குடற்புழுக்கள் இருந்தால் உடல் வளர்ச்சி குறைபாடு, ரத்த சோகை மற்றும் ஊட்ட சத்து குறைபாடு போன்றவை ஏற்படுகிறது. எனவே இந்த குறைபாடுகளை களைவதற்கு ஆண்டுக்கு 2 முறை, ஒரு வயது முதல் 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் கொடுக்கப்படுகின்றன.

1 வயது முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கும், பள்ளி செல்லாத குழந்தைகளுக்கும் ஊட்ட சத்து மையத்திலும், அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு அந்தந்த பள்ளிகளிலேயே மதிய உணவுக்கு பின் மாத்திரைகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. இந்த மாத்திரையை கடித்து சுவைத்து சாப்பிட வேண்டும்.

குமரி மாவட்டத்தில் மாத்திரை வழங்கப்படுவதன் மூலம் 5.85 லட்சம் குழந்தைகள் பயன் அடைவார்கள். இதற்கு தேவையான மாத்திரைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இந்த மாத்திரைகள் சாப்பிடுவதால் எந்த விதமான பக்க விளைவுகளும் ஏற்படுவதில்லை. மாத்திரை உட்கொள்ளாத குழந்தைகளுக்கு வருகிற 16-ந் தேதி மாத்திரைகள் வழங்கப்படும்.

நோய்கள் பரவாமல் இருக்க மாணவ-மாணவிகள் கை கழுவும் பழக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும். இந்த பழக்கத்தை பெற்றோர் உறுதி செய்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் துணை இயக்குனர் (சுகாதாரப்பணிகள்) மதுசூதனன், மாநகராட்சி நகர் நல அலுவலர் கின்ஷால், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியின் நேர்முக உதவியாளர் பிருந்தா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story