இடைத்தரகர்கள் மூலம் பணம் வாங்குவதாக புகார், விழுப்புரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
இடைத்தரகர்கள் மூலம் பணம் வாங்குவதாக எழுந்த புகாரின் பேரில் விழுப்புரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது கணக்கில் வராத ரூ.2½ லட்சம் சிக்கியது.
விழுப்புரம்,
விழுப்புரம் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் வட்டார போக்குவரத்து அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்திற்கு ஓட்டுனர் உரிமம், உரிமத்தை புதுப்பித்தல், புதிய வாகனங்களை பதிவு செய்தல், குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களின் உரிமத்தை ரத்து செய்வதற்காக காவல்துறை சார்பில் பரிந்துரைக்கப்பட்ட ஆவணங்கள், விபத்தில் சிக்கும் வாகனங்களை விடுவிப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக வரும் பொதுமக்களிடம் உடனுக்குடன் பணியை செய்து கொடுக்க இடைத்தரகர்கள் மூலம் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதாக விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு பல்வேறு புகார்கள் சென்றன.
இதன் அடிப்படையில் நேற்று பகல் 12.45 மணியளவில் விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு தேவநாதன் தலைமையில் இன்ஸ்பெக்டர் மாலா, ஏட்டுகள் விஜயதாஸ், பாலமுருகன், நரசிம்மராவ் உள்பட 8 பேர் கொண்ட குழுவினர் 2 கார்களில் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு சென்று, ஒவ்வொரு அறையாக அங்குலம், அங்குலமாக சோதனை நடத்தினர். வட்டார போக்குவரத்து அலுவலரின் கார் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்களின் அறைகளிலும் இந்த சோதனை நடத்தப்பட்டது.
தொடர்ந்து, வட்டார போக்குவரத்து அலுவலர் பாலகுருநாதனிடம் போலீசார் துருவி, துருவி விசாரணை மேற்கொண்டனர். அதோடு அலுவலக ஊழியர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. மேலும் பாலகுருநாதனின் அறையில் இருந்த 3 இடைத்தரகர்களிடமும் போலீசார், கிடுக்கிப்பிடி விசாரணை செய்தனர். இதில் காலையில் மேலும் சில இடைத்தரகர்கள் வந்து சென்றதும், அவர்கள் கொடுத்திருந்த விண்ணப்பங்கள் வட்டார போக்குவரத்து அலுவலரிடம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர் அந்த விண்ணப்பங்களை கைப்பற்றிய போலீசார், வட்டார போக்குவரத்து அலுவலரின் செல்போனையும் கைப்பற்றி யார், யாரெல்லாம் அவரை தொடர்பு கொண்டு பேசியுள்ளனர் என்ற விவரத்தை சேகரித்தனர். அதன் அடிப்படையில் வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் பின்புறத்தில் நின்று கொண்டிருந்த 3 இடைத்தரகர்களை போலீசார் மடக்கிப்பிடித்து வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு அழைத்துச்சென்று அவர்களிடமும் விசாரணை மேற்கொண்டனர். இந்த இடைத்தரகர்கள் அனைவரும் பொதுமக்களிடம் இருந்து பெற்ற லஞ்சப்பணத்தை வட்டார போக்குவரத்து அதிகாரியிடம் கொடுக்க வந்தது தெரியவந்தது.
இந்த அதிரடி சோதனை இரவு 8 மணிக்கு முடிவடைந்தது. இந்த சோதனையின்போது கட்டுக்கட்டாக பணம் சிக்கியது. இதனை போலீசார் எண்ணிப்பார்த்ததில் ரூ.2 லட்சத்து 46 ஆயிரம் இருந்தது. இந்த பணத்திற்கு வட்டார போக்குவரத்து அலுவலரால் உரிய கணக்கு காட்ட முடியாததால் அந்த பணத்தை போலீசார் கைப்பற்றினர். அவற்றுடன் முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன.
கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் ஆவணங்களை பத்திரமாக ஒரு சாக்குப்பை மற்றும் 3 துணிப்பைகளில் போட்டு விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்திற்கு போலீசார் எடுத்துச்சென்றனர்.
இதையடுத்து லஞ்சம் வாங்கியதாக வட்டார போக்குவரத்து அலுவலர் பாலகுருநாதன், மோட்டார் வாகன ஆய்வாளர் முத்துக்குமார் ஆகிய இருவரின் மீதும் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், வட்டார போக்குவரத்து அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதாக எழுந்த புகாரின்பேரில் சோதனை நடத்தி கணக்கில் வராத பணத்தை கைப்பற்றியுள்ளோம். இதுதொடர்பாக வட்டார போக்குவரத்து அலுவலர், மோட்டார் வாகன ஆய்வாளர் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களுக்கு லஞ்சம் கொடுத்த 6 இடைத்தரகர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்ய உள்ளோம் என்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story