முதுமலை-மசினகுடி சாலையில் மரம் வேரோடு சாய்ந்தது, கும்கி யானை உதவியுடன் வனத்துறையினர் அகற்றினர்


முதுமலை-மசினகுடி சாலையில் மரம் வேரோடு சாய்ந்தது, கும்கி யானை உதவியுடன் வனத்துறையினர் அகற்றினர்
x
தினத்தந்தி 10 Aug 2019 4:00 AM IST (Updated: 10 Aug 2019 1:12 AM IST)
t-max-icont-min-icon

முதுமலை- மசினகுடி சாலையில் மரம் வேரோடு சாய்ந்தது. அதனை கும்கி யானை உதவியுடன் வனத்துறையினர் அகற்றினர்.

கூடலூர்,

கூடலூரில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. மேலும் ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழுகின்றனர். இதனால் மின்சாரம் அடியோடு துண்டிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக கூடலூர்-மைசூரு சாலையில் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்து வருகின்றன. அந்தந்த இடங்களுக்கு தீயணைப்பு படையினர் விரைந்து சென்று மரங்களை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் ஒரே சமயத்தில் மரங்கள் முறிந்து ஆங்காங்கே சாலைகளில் விழுவதால், குறிப்பிட்ட இடங்களுக்கு தீயணைப்பு துறையினரால் செல்ல முடியவில்லை.

இந்த நிலையில் முதுமலை புலிகள் காப்பகத்தில் இருந்து மசினகுடி வழியாக ஊட்டிக்கு சாலை செல்கிறது. இந்த சாலையில் முதுமலைக்கும், மசினகுடிக்கும் இடையே நேற்று முன்தினம் இரவு மரம் ஒன்று வேரோடு சாய்ந்து விழுந்தது. இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் வேறு இடங்களில் அவர்கள் பணியில் இருந்ததால், உடனடியாக அங்கு வர முடியவில்லை. இதனால் முதுமலை-மசினகுடி இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதையடுத்து முதுமலை வனத்துறையினர் மூர்த்தி என்ற கும்கி யானையை சம்பவ இடத்துக்கு அழைத்து வந்தனர். பின்னர் சாலையில் விழுந்து கிடந்த மரத்தை கும்கி யானையின் உதவியுடன் அகற்றினர். அதன்பின்னரே 1½ மணி நேரம் கழித்து அந்த வழியாக போக்கு வரத்து சீரானது. வனத்துறையினரின் இந்த நடவடிக்கையை வாகன ஓட்டிகள் பாராட்டினார்கள்.

Next Story