சேலத்தில் கோவில் திருவிழாவில் மோதல்: 2 வாலிபர்களின் கழுத்தை அறுத்த 3 ரவுடிகள் கைது


சேலத்தில் கோவில் திருவிழாவில் மோதல்: 2 வாலிபர்களின் கழுத்தை அறுத்த 3 ரவுடிகள் கைது
x
தினத்தந்தி 10 Aug 2019 3:15 AM IST (Updated: 10 Aug 2019 2:13 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் கோவில் திருவிழாவில் ஏற்பட்ட மோதலில் 2 வாலிபர்களை பிளேடால் கழுத்தை அறுத்த சம்பவத்தில் தலைமறைவாக இருந்த 3 ரவுடிகளை போலீசார் கைது செய்தனர். இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

சேலம், 

சேலம் குகை காளியம்மன், மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி கடந்த சில நாட்களுக்கு முன்பு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்திருந்து கலை நிகழ்ச்சியை கண்டு களித்தனர். அப்போது, முன்புறமாக நின்று கலை நிகழ்ச்சிகளை பார்த்தவர்களை ஒதுங்கி நிற்குமாறு சிலர் கூறினர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது. இதில், குகை பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் (வயது 20) என்பவரின் கழுத்து மற்றும் தொடை பகுதியில் 4 பேர் கொண்ட கும்பல் பிளேடால் அறுத்தது. அவருக்கு உடலில் ரத்தக்காயம் ஏற்பட்டதால் அலறி துடித்தார். பின்னர் அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

இதேபோல் அதே கும்பலை சேர்ந்தவர்கள், செவ்வாய்பேட்டை அருணாச்சல ஆசாரி தெருவில் நடந்து சென்ற விக்னேஷ்வரன் என்பவரையும் கழுத்தில் பிளேடால் அறுத்துவிட்டு தப்பி ஓடினர். இந்த தாக்குதலில் காயம் அடைந்த அவரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

சேலத்தில் நடந்த கோவில் திருவிழாவில் பிளேடால் அறுப்பது இதுவே முதல் முறை என்பதால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இந்த கும்பலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. சம்பவம் நடந்த இடங்களில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர்.

இதில், ரவுடி கும்பலை சேர்ந்த காதல் மணி என்கிற மணிமாறன், நித்யானந்தம், இசக்கி என்கிற விக்னேஷ், உசேன் ஆகிய 4 பேரும் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இவர்கள் அனைவரும் தலைமறைவாக இருந்து வந்தனர்.

இவர்களில் நித்யானந்தம், இசக்கி, உசேன் ஆகிய 3 ரவுடிகளையும் போலீசார் நேற்று கைது செய்தனர். கும்பல் தலைவனாக செயல்பட்ட காதல் மணி தொடர்ந்து தலைமறைவாக இருந்து வருகிறார். இவர் மீது ஆள் கடத்தல் உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. குண்டர் தடுப்பு சட்டத்திலும் கைதாகி சிறைக்கு சென்றுள்ளார். இருப்பினும் அவரை தொடர்ந்து போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கோவில் திருவிழாவில் கலை நிகழ்ச்சி மற்றும் உருளுதண்டம் போடும்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டதாகவும், இதனால் தகராறு ஏற்பட்டு 2 வாலிபர்களை பிளேடால் கழுத்தை அறுத்ததாகவும் கைதானவர்கள் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். ஆனால் கும்பல் தலைவன் காதல் மணி சிக்கினால் மட்டுமே முழு விவரம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

Next Story